bbc.co.uk navigation

தொம்பேயில் பொலிஸ் மீது மக்கள் தாக்குதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2011 - 15:05 ஜிஎம்டி
பிபிசி தமிழ்

பிபிசி தமிழ்

இலங்கையில், தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தொம்பே பகுதியில் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழல் இன்று வெள்ளிக்கிழமை நிலவியது.

பொலிஸ் தரப்பில் காயமடைந்த 6 பேரி்ல் நால்வர் காயத்தின் பாரதூர தன்மை காரணமாக நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

பொலிஸ் நிலையத்தை தாக்கிய பொதுமக்கள், அங்கிருந்த ஜீப் வண்டிகளையும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஸி ப்ரொக்டர் பிபிசியிடம் கூறினார்.

பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த வந்த தீயணைக்கும் வண்டிகள் இரண்டையும் பிரதேசவாசிகள் தாக்கி திருப்பியனுப்பிவிட்டதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

பொலிசார் மீது குற்றச்சாட்டு

கொள்ளைக் குற்றச்சாட்டில் நேற்று கைதான 28 வயது சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞனின் மரணத்தைக் கேட்ட அவரது தந்தையும் திடீர் மாரடைப்பினால் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவங்களால் ஆத்திரமடைந்த பிரதேச மக்களே பொலிசாருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருட்டுப் பொருள் இருக்குமிடத்தைக் காட்டுவதற்காக சென்று கொண்டிருந்தபோது, பொலிஸ் ஜீப்பிலிருந்து பாய்ந்து தப்ப முயன்றபோது ஏற்பட்ட காயத்தால் சந்தேக நபர் உயிரிழந்ததாக தொம்பே பொலிஸார் கூறுகின்றனர்.

ஆனால் பொலிசாரின் தாக்குதல் காயங்களாலேயே குறித்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புச் செயலரின் பிரதிநிதி மற்றும் அரசியல்வாதிகள் சம்பவ இடத்துக்கு வந்தும் இன்று எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

பிரதேசத்தில் நிலமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.