
விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள் தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு போராட்டங்கள் நடந்தன( கோப்பு படம்)
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்ததையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அரச படையினரிடம் சரணடைந்தனர்.
விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களும் மற்றவர்களும் என பெரும் எண்ணிக்கையானவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட போதிலும், இவர்களில் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவோ இல்லையென்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.
சிறுநீரக பாதிப்புக்குள்ளான தமிழ் கைதி
இந்த நிலையில், கொழும்பு வெலிக்கடை மறியல் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்.
33 வயதான இராசரத்தினம் ஜெகதீஸ்வரன் என்ற இந்த தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்கும், அவருக்கான வைத்தியத்திற்கும் உதவி புரியுமாறு அவரது குடும்பத்தினர் கோரியிருக்கின்றார்கள்.
மன்னார் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த இவர் தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி ரனிதா ஜெகதீஸ்வரன் தமிழோசையிடம் கூறினார்.
இறுதி யுத்தத்தின்போது முள்ளியவளையில் இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்காயத்திற்கு இலக்காகியிருந்த இவர் கப்பல் மூலமாக புல்மோட்டைக்குச் சென்று திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் இவர், 2009 ஆம் ஆண்டு பிற்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்குக் கெர்ணடு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
தனது கணவனுக்கு எதிராக இன்னும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவோ வழக்குத் தாக்கல் செய்யப்படவோ இல்லை என்று அவரது மனைவி ரனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்து முதுகில் காயமடைந்த பின்னர் அந்த அமைப்பில் இருந்து விலகிய தன்னை ஜெகதீஸ்வரன் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக ரனிதா கூறினார்.
சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இவருக்கு சிறைக் கைதியாக இருக்கும் நிலையில் சிகிச்சையளிப்பதும், சிறுநீரக மாற்றம் செய்வதும் கடினமான காரியம் என வைத்தியர்கள் தெரிவித்திருப்பதாக கூறும் ரனிதா, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் கருத்து
இதேவேளை, இந்த நோயாளியின் விடுதலை பற்றி சிறைச்சாலைகள் தலைமை ஆணையாளர் பீ.டப்ளிவ். கொடிப்பிலியிடம் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்ட போது, விடுதலை தொடர்பான முடிவுகளை சட்டமா அதிபரின் ஆலோசனைப் படி நீதிமன்ற உத்தரவூடாக மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
சிகிச்சை முடியும் வரை, வைத்தியசாலையில் தங்கியிருக்கும் அளவுக்கு தம்மால் அனுமதி வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் கைதி ஒருவரை, வைத்தியசாலையிலும் விலங்கு போட்டு வைத்திருக்கிறீர்களே என்று கேட்டபோது, கைதிகள் தப்பியோடி விடாமல் இருப்பதற்காக அங்கு சிறைக்காவலர் ஒருவரின் காவலுடன் அவர்களை விலங்கு போட்டு வைத்திருப்பது தான் வழமை என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.








