
மர்ம மனிதன் தொல்லையால் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே முறுகல்
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணொருவரை மர்ம மனிதன் தாக்கி விட்டு சென்ற சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் பெரும் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வீதிகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கால் அங்கு பதற்றம் நிலவியது.
பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தி எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களை கலைத்தனர்.
இந்த சம்பவங்களின் போது, மக்கள் பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்பான நடவடிக்கைகளின் பின்னணியில் பொலிசாரே இருப்பதாக பொது மக்களில் பலர் சந்தேகம் தெரிவித்தனர்.
மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு அவர்களை பிடிக்க முற்படும் போது பொலிசார் அவர்களைப் பாதுகாப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
ஆனால், மர்ம மனிதர்கள் என்றோ கிறீஸ் மனிதர்கள் என்றோ எவரும் இல்லை என்று கூறும் பொலிசார், மக்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையிலும் சந்தேகத்தின் அடிப்படையிலும் செயற்படுவதாக வாதிடுகின்றனர்.
இதற்கிடையே, மர்ம மனிதனால் கீறல் காயங்களுக்கு உள்ளானதாகக் கூறப்படும் பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது








