bbc.co.uk navigation

5 மாதங்கள் கடந்தும் மீள்குடியேற்றம் இல்லை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஆகஸ்ட், 2011 - 16:39 ஜிஎம்டி
போரினால் இடம்பெயர்ந்த வடக்கு மக்கள்

போரினால் இடம்பெயர்ந்த வடக்கு மக்கள்

மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாகிவிட்ட போதிலும், தமது சொந்தக் காணிகளுக்கு இன்னும் தங்களை அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக்கேணி மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவில் இருந்து சுமார் 18 மைல் தொலைவில் உள்ள கொக்கிளாய் பகுதியில் அதிகாரிகள் தம்மை ஒரு வெட்டவெளியில் கூடாரங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அங்கு தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பன பற்றாக்குறையான நிலையிலேயே தாங்கள் இருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் தமது கிராமம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றியதையடுத்து, நிரந்தரமாக இருக்க இடமின்றி, யுத்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்து பின்னர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இந்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

தமது பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் அறிவித்திருந்ததையடுத்தே, கடந்த மார்ச் மாதம் தங்களை தமது பிரதேசத்திற்கு அதிகாரிகள் மீள்குடியேற்றததிற்காக அழைத்து வந்த போதிலும் இன்னும் தங்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தொழில் வாய்ப்பின்றியும், நிவாரணத்தை நம்பியும் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வரும் இந்த மக்கள் தங்களை உடனடியாகத் தமது கிராமத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியிருக்கின்றனர்.

கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதுகுறித்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் கருத்து தெரிவிக்கும்போது, இந்த மக்கள் அவர்களது காணிகளில் சென்று குடியேறுவதற்கு வசதியாகக் காணிகளைத் துப்பரவு செய்தபோது சில வெடிபொருட்கள் அங்கிருந்து வெடித்துள்ளதாக கூறினார்.

அதனையடுத்து, கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான ஐநா அதிகாரிகளிடம் அந்தப் பிரதேசத்தை மீண்டும் சோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டிருப்பதாகவும், இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.