நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.1 எம்பி)

அதிவேக பாதையில் சைக்கிளோட்டிய இலங்கை வீரர்களின் அனுபவம்

30 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:17 ஜிஎம்டி

இலங்கை சைக்கிளோட்ட அணியின் முகாமையாளர் சுஜீவன் சேனாரத்ன

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் 7வது நாள் போட்டிகள் இன்று புதன்கிழமை நடந்துவருகின்றன.

மொத்தமுள்ள 261 தங்கப் பதக்கங்களில் இதுவரை குறைந்தது 155 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன.

(ஜிஎம்டி நேரம் 16:00 வரை) பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா- 34 தங்கம், இங்கிலாந்து 34- தங்கம் என முன்னிலை வகிக்கின்றன.

இந்தியா 10 தங்கம்,15 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தமாக 36 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.

பளுதூக்கல் மற்றும் மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் குறைந்தது தலா 3 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தான் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே, அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட இலங்கை சைக்கிளோட்ட வீரர்கள் 31-ம் திகதி நடக்கவுள்ள போட்டிகளுக்கு ஆயத்தமாகிவருகின்றனர்.

கடந்த 23-ம் திகதி, 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா தொடங்குவதற்கான ஆயத்தங்கள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தபோது, நகருக்கு அருகே உள்ள (M74) அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவே இலங்கை வீரர்கள் நால்வர் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்களை அவதானித்த இங்கிலாந்து ட்ரையாத்லன் வீரர் அலிஸ்டயார் பிரவுன்லீ, படம்பிடித்து டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்றிவிட்டார்.

உடனடியாக அங்கு விரைந்த ஸ்காட்லாந்து பொலிஸார் அவர்களைத் தடுத்துநிறுத்து, அறிவுரை வழங்கி அனுப்பிவைத்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன.

அந்த சைக்கிளோட்ட வீரர்கள் கிளாஸ்கோ விளையாட்டு வீரர்களுக்கான கிராமத்தில் பிபிசி தமிழோசையிடம் பேசினர்.

'மறக்கமுடியாத அனுபவம்'

இலங்கை சைக்கிளோட்ட வீரர் ஜீவன் ஜயசிங்க

'உண்மையில் பயந்தே போய்விட்டேன். வீதியில் அடுக்கடுக்காக வாகனங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. என்ன நடக்கின்றது என்று என்னால் கொஞ்ச நேரம் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையை போல வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அருகிலிருந்த சக சைக்கிளோட்ட வீரரிடம் கூறினேன்' என்று தனது அனுபவத்தை விளக்கினார் ஜீவன் ஜயசிங்க.

'இலங்கை வீரர்கள் அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிளோடினார்கள் என்ற செய்தி முழு உலக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிளோட்டிய இந்த அனுபவம், உண்மையில் எனது சைக்கிளோட்ட வாழ்க்கையில் என்றுமே அழியாத நினைவாக இருக்கும்' என்றும் கூறினார் இலங்கை சைக்கிளோட்டவீரர் ஜீவன் ஜயசிங்க.

இந்த சைக்கிளோட்ட அணிக்கு பொறுப்பாளராக கிளாஸ்கோ வந்துள்ள இலங்கை சைக்கிளோட்ட வீரர்களுக்கான சம்மேளளத்தின் செயலாளர் குரூப் கேப்டன் சுஜீவன் சேனாரத்னவிடம், சம்பவம் எப்படி நடந்தது என்று தமிழோசை வினவியது.

'எங்களுக்கு சில வழித்தடங்களை ஏற்கனவே வழங்கியிருந்தார்கள். ஆனால் அந்த வழித்தடங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியவை அல்ல. தவறுதலாக டீம்- கார் எம்- 74 அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்துவிட்டது. அப்பாவி சைக்கிள் வீரர்கள் அந்தக் காரை பின்தொடர்ந்து சென்றுவிட்டனர்' என்றார் சுஜீவன் சேனாரத்ன.

'எங்களின் டீம் கார் அந்த சாலைக்குள் நுழைந்துவிட்ட பின்னர் தான் அது ஒரு மோட்டார்-வே என்பதையே நாங்கள் உணர்ந்துகொண்டோம். மற்ற நாடுகளைப் போல அல்ல. இங்கு டோல் கேட்கடவைகள் இல்லை. நாங்கள் நெடுஞ்சாலை பொலிசாரிடம் உதவியைக் கோரினோம். அவர்கள் உடனடியாக விரைந்துவந்து, எங்களின் வீரர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவர உதவிபுரிந்தனர்' என்றும் கூறினார் குரூப் கேப்டன் சுஜீவன் சேனாரத்ன.

இலங்கை சைக்கிளோட்ட வீரர்கள் பங்குகொள்ளும் போட்டிகள் நாளை 31-ம் திகதி தொடங்குகின்றன.

'பயிற்சி வேண்டும்'

சைக்கிளோட்ட வீராங்கனை சிரியலதா விக்ரமசிங்க

இதேவேளை, தம்மை காமன்வெல்த் போன்ற பெரிய உலக அளவிலான போட்டிகளுக்கு அழைத்துவர முன்னர் நல்ல பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று கூறினார் சைக்கிளோட்ட வீராங்கனையான சிரியலதா விக்ரமசிங்க.

'எங்களை இதுபோன்ற போட்டிகளுக்கு அழைத்துவருவதாக இருந்தால், 3 மாத பயிற்சி போதாது. இந்தப் போட்டிகளுக்கு 4 ஆண்டு இடைவெளி இருப்பதால், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது பயிற்சி தேவை. எங்களுக்கு சர்வதேச தரத்திலான நல்ல பயிற்சியாளர் ஒருவர் அவசியம்' என்றும் கூறினார் சிரியலதா.

சிரியலதா விக்ரமசிங்க கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் நடந்துள்ள தேசிய மட்டப் போட்டிகள் பலவற்றில் முதலிடம் பெற்றுள்ளார்.

2006 மற்றும் 2010-ம் ஆண்டுகள் நடந்த தெற்காசிய விளையாட்டு விழாக்களில் 3 தங்கம், 2 வெள்ளி என குறைந்தது 5 பதக்கங்களை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.