கிரிக்கெட்: உலகக் கோப்பையை வென்றது இலங்கை

  • 6 ஏப்ரல் 2014
வெற்றிக் களிப்பில் குமார சங்கக்கார
வெற்றிக் களிப்பில் குமார சங்கக்கார

வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது.

மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது

இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை.

இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார்.

இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட்டியிருந்தனர்.

முதலில் மட்டை வீசிய இந்திய அணியில் விராத் கோலியைத் தவிர மற்ற மட்டைவீச்சாளர்களின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதியாட்டத்தை மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டிருந்த இலங்கை அணி, இம்முறை இறுதியாட்டத்தை சிறப்பாக வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.