டி 20 உலகக் கோப்பை- அரையிறுதிக்கு தகுதி பெறுமா இலங்கை?

  • 31 மார்ச் 2014

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இலங்கை தகுதி பெறுமா என்பது இன்று முடிவாகிறது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை போட்டியின் முக்கியமான ஆட்டமொன்றில் இலங்கை நியூசிலாந்தை எதிர்த்து ஆடுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெரும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமென்பதால் இரு அணிகளும் இந்த அட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

நடைபெற்று வரும் இந்த டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் தகுதி பெற்றுள்ளன.

மாலிங்க தலைவர்

முதல் முறையாக தலைமைப் பொறுப்பில் லசித் மாலிங்க

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தலைவராக இருப்பார்.

இலங்கை அணிக்கு அவர் தலைமையேற்பது இதுவே முதல் முறை. இந்தப் போட்டிக்கு இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால மாலிங்க இன்றைய ஆட்டத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரு அணிகள் முடிவாகியுள்ள சூழலில், அடுத்த இரு அணிகள் எவை என்பதை இலங்கை-நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில் முடிவாகும்.

இந்த டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களின் அடிப்படையில், நிகர ஓட்ட வீதத்தில் இலங்கையே முதலிடம் வகிக்கிறது.