BBC navigation

இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவராக கவாஸ்கர் - உச்சநீதிமன்றம் உத்தரவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 மார்ச், 2014 - 07:29 ஜிஎம்டி

கவாஸ்கர் இடைக்காலத் தலைவர்- உச்சநீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்காலிகத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் செயல்படுவார் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதன் இறுதி தீர்ப்பை அளிக்கும் வரை பிசிசிஐயின் தற்காலிகத் தலைவராக சுனில் கவாஸ்கர் 2014ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்பிலான செயல்பாடுகளை மேற்கொள்வார் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

பிசிசிஐயின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்பில் அதன் மூத்த துணைத்தலைவரான ஷிவ்லால் யாதவ் செயல்படுவார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுவதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது.

மேலும் இந்தியா சிமண்ட்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அகியோரை தவிர வேறு எவரும் பிசிசிஐயில் எந்தப் பொறுப்பும் வகிக்கக்கூடாது என்றும் அந்த அமர்வு இன்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் மாதம் 16 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை இன்னும் நிலுவையில் இருந்து வரும் நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியும் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எதிர்வரும் ஐபிஎல் தொடரை பாதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை’ என்றார் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தரப்பு வழக்கறிஞர் சுந்தரம்.

பின்னணி

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் எழுந்த பந்தயம் கட்டுதல், சூதாட்டம் ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு விசாரணையை முடித்து அது தொடர்பிலான அறிக்கையை பிப்ரவரி 10ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரியாக இருந்த பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலும் விசாரணை தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மார்ச் 25ஆம் தேதி அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய பிரீமியர் லீக் தொடர்பில் எழுந்துள்ள முறைகேடுகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த பிசிசிஐயின் தற்போதைய தலைவர் ஸ்ரீநிவாசன் தன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

பிசிசிஐயின் தலைவர் பதவி வகிக்கும் ஸ்ரீநிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

பின் குருநாத் பிணையில் விடுதலையான பிறகு ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.

இந்த வருடம் பெப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.யின்) தலைவராக ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிவாசன் மற்றும் குருநாத் மெய்யப்பன் ஆகிய இருவரும் எல்லா குற்றச்சாட்டுகளையும் இதுவரை மறுத்து வருகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.