நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.4 எம்பி)

ஊக்க மருந்து பயன்பாடு : தொடரும் சர்ச்சைகளும் சவால்களும்

15 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:47 ஜிஎம்டி

டைசன் கே ( இடது) அசாஃபா பவல்( வலது)

உலகின் இரண்டு முன்னணி தடகள வீரர்கள் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது விளையாட்டு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் உலகின் முன்னணி வீரர்களாக இருக்கும் அமெரிக்காவின் டைசன் கே மற்றும் ஜமைக்காவின் அசாஃபா பவல் ஆகியோர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர்.

அடுத்த மாதம் மாஸ்கோவில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த இருவரும் அப்போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தை மிக வேகமாக, குறைவான நேரத்தில் ஓடியுள்ளவர் டைசன் கே என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகளவில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தை மிகக் குறைவான நேரத்தில் ஓடி சாதனைப் படைத்துள்ள உசைன் போல்ட்டுக்கு அடுத்தபடியாக அந்த தூரத்தை குறைவான நேரத்தில் ஓடியவர்கள் என்கிற பெருமையை டைசன் கேயும், ஜமைக்காவின் யொஹான் பிளேக்கும் கூட்டாக பெற்றுள்ளனர்.

2008 ஆம் ஆண்டில் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்துக்கான சாதனையை முறியடிக்கும் முன்னர் அச்சாதனை அசாஃபா பவலின் பெயரிலேயே இருந்தது.

"தவறு செய்யவில்லை"

ஊக்க மருந்தும் உடலியக்கமும் ஒரு வரைபடம்

தற்போது சிக்கலிலுள்ள இந்த இரண்டு வீரர்களுமே தம்மீது தவறுகள் இல்லை என்று கூறுகிறார்கள்.

டைசன் கேயோ தான் எந்த சதித் திட்டத்திலும் ஈடுபடவில்லை என்றும், தான் யார் மீது நம்பிக்கையை வைத்திருந்தேனோ அவர் தன்னை கைவிட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அசாஃபா பவல் தடை செய்யப்பட்டுள்ள ஒரு ஊக்க மருந்து எப்படி தனது உடலுக்குள் சென்றது என்பது குறித்து தனது குழுவினர் ஒரு விசாரணையை நடத்துவார்கள் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினை குறித்து இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரரும், தடகளவியல் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்றவருமான டாக்டர் ஆர் நடராஜன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.