சாம்பியன்ஸ் ட்ராஃபி: இறுதிப் போட்டியில் இந்தியாவா இலங்கையா?

  • 18 ஜூன் 2013
பிரிவு B-இல் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது
பிரிவு B-இல் முன்னிலை பெற்று இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகளின் ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ள இலங்கை அணி நாளை மறுதினம் (20.06.2013) வியாழக்கிழமை இந்திய அணியுடன் மோதுகிறது.

அதற்கு முன்னதாக, நாளை புதன்கிழமை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியை இலங்கை அல்லது இந்திய அணி எதிர்வரும் 23-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

நேற்றைய போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு முன்னதாக ஆடிய இலங்கை 8 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அந்த இலக்கை அடைய முடியாமல் 42.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களையே குவித்து 20 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை- ஆஸ்திரேலியா ஆட்டம்

நடப்புச் சாம்பியனை இலங்கை அணி வெளியேற்றியது
நடப்புச் சாம்பியனை இலங்கை அணி நேற்று வெளியேற்றியது

இம்முறை சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டித் தொடரில் ஆரம்பத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து, பின்னர் நியூசிலாந்திடம் வாஷ்-அவுட் தோல்வியைத் தழுவியிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு நேற்றைய போட்டி மிக முக்கியமானதாக இருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, இலங்கையை முதலில் மட்டை பிடிக்குமாறு அழைத்தது.

இலங்கை அணி வீரர்களை முன்கூட்டியே வீழ்த்திவிட்டால் தமது இலக்கை விரைவில் அடைந்துவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி நம்பினார்.

ஆரம்பத்தில் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தாலும், மஹேல ஜயவர்தன தனது அபார ஆட்டத்தால் 81 பந்துகளில் 84 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியை பலப்படுத்திவிட்டார்.

அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு 29 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய இக்கட்டில் இருந்த ஆஸ்திரேலியாவால் அதனை அடைய முடியாமல் போய்விட்டது.

நம்பியிருந்த ஷேன் வொட்சனை 2-வது ஓவரிலேயே ஆஸ்திரேலியா இழந்தது. மற்றவர்களாலும் சோபிக்க முடியாமல் போனதால் ஆஸ்திரேலியா இம்முறை அரையிறுதிக்கு வராமலேயே வெளியேற நேர்ந்தது.