பிரபல ஹாக்கி வீரர் லெஸ்லி கிளாடியஸ் காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 டிசம்பர், 2012 - 15:35 ஜிஎம்டி

லெஸ்லி கிளாடியஸ். (படம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

இந்தியாவின் பிரபல ஹாக்கி விளையாட்டு வீரர் லெஸ்லி கிளாடியஸ் தமது 85 வது வயதில் கொல்கத்தாவில் வியாழனறு காலமானார்.

மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அவர் சில காலம் நோய்வாய்பட்டிருந்தார்.

ஹாக்கி உலகில்இந்தியா வல்லரசாக இருந்த காலப்பகுதியில், 1948 ஆம் ஆண்டு லண்டன், 52 ல் ஹெல்சின்கி மற்றும் 1956 ஆன் ஆம் ஆண்டு மெல்பர்ண் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் உறுப்பினராக இவர் இருந்தார்.

அதன் பின்னர் 1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு அவர் தலைவராக இருந்தார்.

எனினும் அப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கமே வென்றது.

ஹாக்கி மேதை என்று அழைக்கப்பட்ட தயான் சந்துடன் லெஸ்லி கிளாடியஸ், கேசவ் தத், பல்பிர் சிங், ஜஸ்வந்த் சிங், கிரஹானந்த் சிங் ஆகியோர் இந்திய ஹாக்கி அணியை பல ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத ஒரு அணியாக வைத்திருந்தனர்.

லெஸ்லி கிளாடியஸின் மகன் பாபி கிளாடியஸும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்தியாவின் பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல டைம்ஸ் பத்திரிகை 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது அவரது ஆட்டம் குறித்து எழுதும் போது, அவர் ஆடாவிட்டால் ஒரு ஹாக்கி போட்டியை பார்ப்பது அர்த்தமற்றது என்று புகழ்ந்தது.

அவர் இந்திய அணியில் உறுப்பினராக இருந்த போது, தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த தயான் சந்த், அணியில் கிளாடியஸ் தன்னைத்தானே தேர்தெடுத்துக் கொள்கிறார், மற்றவர்களைதான் நாங்கள் தேர்வு செய்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, அவரை கௌரவிக்கும் வகையில் போட்டி காலத்தின் போது, லண்டனிலுள்ள புஷ்லி ரயில் நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.