மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணை முடியும் வரை நடுவர்கள் இடைநீக்கம்: ஐசிசி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 அக்டோபர், 2012 - 10:35 ஜிஎம்டி
ஐசிசி நடத்திய விசாரணைக் கூட்டம்

ஐசிசி நடத்திய விசாரணைக் கூட்டம்

இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பை பந்தயத்தின்போது ஆட்டத்தின் முடிவை முறைகேடாக முன் நிர்ணயம் செய்ய ஒப்புக்கொண்டதாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய ரகசிய நடவடிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஆறு ஆட்ட நடுவர்களையும், அவர்கள் மீதான விசாரணைகள் முடியும் வரை நடுவர்களாக பங்கேற்க அனுமதிக்கப்போவதில்லை என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசி கூறுகிறது.

கொழும்பில் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐசிசி, விசாரணையின் முடிவுகள் தெரியவரும் வரை உள்நாட்டளவில் நடக்கும் ஆட்டங்களிலோ சர்வதேச ஆட்டங்களிலோ இந்த ஆறு பேரும் நடுவர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியது.

பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நடுவர்கள் எவருடனும் ஐசிசி ஒப்பந்தம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

நடுவர்கள் நியமனங்களுக்கும் பணி நிர்வாகத்துக்கும் பொறுப்பான அமைப்புகள் குறிப்பிட்ட நபர்கள் நடந்துகொண்ட விதம் பற்றி உடனடி விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்தியா டிவி' என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய நடவடிக்கையில், ஆதாயம் கிடைக்கும் என்று ஆட்கள் தூண்டிவிட்டபோது முறைகேடான விஷயங்களைச் செய்து ஆட்டத்தின் முடிவை மாற்ற தாங்கள் உதவுவதாக இந்த நடுவர்கள் கூறியது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டிருந்தது.

இலங்கையைச் சேர்ந்த நடுவர்கள் மூன்று பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த நடுவர் ஒருவர் ஆகியோர் இவ்வாறு படம்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் ஒப்புக்கொண்டது வீடியோ பதிவுசெய்யப்பட்டாலும் பந்தயத்தின்போது ஆட்ட முடிவு முன் நிர்ணய ஊழல் ஏதும் நடைபெறவில்லை.

இலங்கை நடுவர்கள் இருவரும் வங்கதேசத்தவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழுவோ, இந்த இலங்கை நடுவர்கள் ஆட்டத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்துவிட்டனர் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் தொடரும் என்றும் கூறியிருக்கிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.