டி20: இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 அக்டோபர், 2012 - 17:16 ஜிஎம்டி
திலகரத்ன தில்ஷானின் விக்கெட்டைக் கொண்டாடுகிறார் ரவி ராம்பால்

திலகரத்ன தில்ஷானின் விக்கெட்டைக் கொண்டாடுகிறார் ரவி ராம்பால்

டி20 இருபது ஓவர் கிரிக்கெட் ஆடவர் உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் வென்றுள்ளது.

கொழும்பு பிரேமதாஸா அரங்கத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வது இதுவே முதல் முறை.

1979க்குப் பின்னர் அவ்வணி எந்த ஒரு உலகக் கோப்பையையும் வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் முதலில் மட்டை பிடித்து 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மார்லன் சாமுவேல் அதிகபட்சமாக 56 பந்துகளில் 78 ரன்களைக் குவித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்த கிறிஸ் கெயிலின் ஆட்டம் இறுதிப் போட்டியில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.

அவர் மூன்று ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

மிகவும் அதிகமில்லாத ஒரு இலக்கை எட்ட வேண்டும் என்ற நிலையில் மட்டை இலங்கை அணியினர் இரண்டாவதாக மட்டை பிடித்தனர்.

ஆனாலும் அவர்களது ரன் குவிப்பு ஆரம்பம் முதலே மிகவும் மந்தமாக இருந்தது.

இலங்கையின் அணியின் துவக்க் ஆட்டக்காரர் திலகரட்ண தில்ஷன் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு துவக்கத்திலேயே ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

குமார் சங்கக்கார 22 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்த போது இலங்கை அணியின் வீழ்ச்சி தொடங்கியது.

அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன மட்டுமே அதிகபட்சமாக 33 ஓட்டங்களை எடுத்தார்.

வேகப் பந்து வீச்சாளரான நுவன் குலசேகர 26 ஓட்டங்களை எடுத்தாலும் அது இலங்கை அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை.

மேற்க்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சுமட்டுமல்ல அவர்களின் ஃபீல்டிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது

அந்த அணியின் மார்லன் சாமுவேல் அணித் தலைவர் டேரன் சமி மற்றும் சுனில் நரேயினின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்து கோப்பையை வெல்ல உதவியது.

இலங்கை அணியை ஊக்கப்படுத்தும் வகையில் அந்நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இறுதி ஆட்டத்தை அரங்கில் உட்கார்ந்து போட்டியை பார்த்தார்.

இலங்கை அணி 18.4 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தமது அணி வெற்றி பெற்ற்றுள்ளது ஆட்டக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் மேற்க்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நாடுகள் அனைத்துக்குமே மகிச்சியும் பெருமையும் அளிக்கக் கூடிய விஷயம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.