bbc.co.uk navigation

பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்: கிரிஷா பெருமிதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 செப்டம்பர், 2012 - 14:34 ஜிஎம்டி
தமிழோசை அலுலலகத்தில் தனது வெள்ளிப் பதக்கத்துடன் கிரிஷா

தமிழோசை அலுலலகத்தில் தனது வெள்ளிப் பதக்கத்துடன் கிரிஷா

லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் எஃப் 42 குறைபாடு உள்ளவர்களுக்கான ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் இந்தியாவின் கிரிஷா நாகராஜ கவுடா தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

கிரிஷா நாகராஜ கவுடாவுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார்.

எஃப் 42 குறைபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள கால்களிலோ கைகளிலோ குறைபாடு உள்ளவர்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டி கிரிஷா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

கர்நாடக மாநிலம் ஹோசனகராந்த் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த கிரிஷா, தான் இதுவரை தாண்டியதிலேயே மிக அதிக உயரத்தை ஒலிம்பிக்கில் தாண்டி இந்த பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

தனது பயிற்சியாளர்கள், இந்திய அணியின் சக வீரர்கள் போன்றோருடன் தமிழோசை அலுவலகத்துக்கு விஜயம் செய்திருந்த கிரிஷா, தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

"பங்குபெற்ற முதல் பாரலிம்பிக் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவிலும் எனது வெற்றிக்கு நல்ல வரவேற்பு இருந்தது." என்றார்.

"இந்திய ஊடகங்கள் கூட பாரலிம்பிக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன . கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகள் கூட எனது படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டன.எனவே இனி வரும் காலங்களில் இந்தியாவில் விளையாட்டுக்கு மேலும் ஒரு ஏற்றம் கிடைக்கும் என நம்புகிறேன்."

"உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு பல தனியார் நிறுவனங்கள் உதவுகின்றன. அது போன்ற ஒரு சூழலும், கூடுதலான தொழில்நுட்பங்களும் எமக்கும் கிடைத்தால், எம்மாலும் சாதிக்க முடியும்" என்றார் கிரிஷா நாகராஜ கவுடா.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.