
ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்ட போது ஹாமில்டன்
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஒரு வீரரின் பதக்கம் இப்போது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தால் பறிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் ஓட்டும் போட்டியின் ரோட் ரேஸ் பிரிவில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் டைலர் ஹாமில்டன் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்தே அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஊக்க மருந்து பரிசோதனைக்காக அவர் கொடுத்த இரத்த மாதிரி அழிக்கப்பட்டுவிட்டது.
எனினும், ஊக்க மருந்து எதையும் தான் பயன்படுத்தவில்லை என்று பல ஆண்டுகளாகக் கூறி வந்த ஹாமில்டன், கடந்த ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்டார்.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் இந்த முடிவை அடுத்து அப்போது வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்யாவின் வியாட்செஷ்லாவ் எகிமோவ் தகுதி உயர்த்தப்பட்டு அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
இதேபோல் வெண்கலப் பதக்கம் பெற்ற அமெரிக்காவின் பாபி ஜூலிச்சுக்கு வெள்ளிப் பதக்கமும், நான்காவது இடத்தை அப்போது பெற்ற ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ரோஜர்ஸுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்படுகின்றன.
டைலர் ஹாமில்டனிமிருந்து பதக்கம் பறிபடுவதும் அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அவருக்கு முறைப்படி வெள்ளிக்கிழமை(10.8.12) தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் பேச்சாளர் மார்க் ஆடம்ஸ் கூறியுள்ளார்.







