bbc.co.uk navigation

'இலங்கை ஒலிம்பிக் குழுவுக்கு பயிற்சியாளர் இல்லை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஆகஸ்ட், 2012 - 14:11 ஜிஎம்டி

லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ள இலங்கை விளையாட்டுக்குழுவில் பயிற்சியாளர்கள் எவரும் இடம்பெறவில்லை என்று அந்த அணியின் விளையாட்டு வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 7 விளையாட்டு வீரர்களைக் கொண்ட இலங்கை அணி வந்திருக்கின்ற போதிலும், அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு அவர்களது பயிற்சியாளர்கள் எவரும் வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

அந்த அணியில் அதிகாரிகள் பலர் வந்திருப்பதாகவும், ஆனால் பயிற்சியாளர்கள் எவரும் இடம்பெறவில்லை என்றும் ஆண்களுக்கான மரதன் போட்டியில் கலந்துகொள்ளும் அநுராதகுரே என்னும் இலங்கை வீரர் கூறியுள்ளார்.

''ஒரு அணியில் உள்ள வீரர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களது தேவை என்ன, இலக்கு என்ன, முக்கியத்துவம் என்ன என்பது அவர்களது பயிற்சியாளர்களுக்குத்தான் தெரியும். பயிற்சியாளர் இருக்கும் போது ஒரு விளையாட்டு வீரர் தான் வழமையாக செயற்படுவதைவிட சிறப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் செயற்படுவார். ஆனால் இலங்கை அணியில் எவரும் கிடையாது'' என்றார் அவர்.

தான் லண்டனிலேயே இருந்து, தனது சொந்த பயிற்சியாளரை வைத்திருப்பதால், தனக்கு அது நல்லதாகப் போய்விட்டது என்றும் அவர் கூறினார்.

ஒரு விளையாட்டு வீரரின் பலமே அவரது பயிற்சியாளர்தான் என்று கூறும் அநுராதகுரே, செலவுக்குறைப்புக்காக இலங்கை அணி இவ்வாறு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்ஸில் இதுவரை நடந்த போட்டிகளில் தெற்காசிய அணிகள் பெரிதாக சோபிக்கவில்லை.

இந்திய அணி இரு பதக்கங்களை மாத்திரம் பெற்றிருக்கின்ற போதிலும், இலங்கை அணி இதுவரை பதக்கம் எதனையும் பெறவில்லை. எந்த தெற்காசிய அணியும் இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை பெறவில்லை.

இன்று பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி நடந்தது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் மரதன் போட்டியிலேயே ஆண்களுக்கான பிரிவில் அநுராதகுரே கலந்துகொள்கிறார்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.