bbc.co.uk navigation

சமநிலையில் முடிந்த இந்திய இலங்கைப் போட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 பிப்ரவரி, 2012 - 16:45 ஜிஎம்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி மிகவும் பரபரப்பான வகையில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரு அணிகளும் தங்களது ஐம்பது ஓவர்களில் 236 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இப்போட்டியில் இரு அணிகளும் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தன என்பதும், ஒரே மாதிரியாக இருதரப்பிலும் எட்டு உபரி ஓட்டங்கள் பெறப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பந்து குறைவாக வீசப்பட்டது

எனினும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் 30 ஆவது ஓவரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஸித் மாலிங்க ஆறு பந்துகளுக்கு பதிலாக ஐந்து பந்து வீசியது கள நடுவர் நிஜேல் லாங் அவர்களால் கவனிக்கப்படாமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஒரு பந்தும் வீசப்பட்டிருந்தால் இந்தியா இந்தப் போட்டியில் கூடுதலாக ஓட்டம் பெற்று வெற்றி பெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் என இந்தியத் தரப்பும், அந்த ஒரு பந்து தங்களுக்கு கிடைத்திருந்தால் இந்தியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு தமக்கு கிடைத்திருக்கும் எனவும் இலங்கை தரப்பில் கருத்துக்கள் வந்துள்ளன.

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே இதுவரை விளையாடப்பட்டுள்ள 131 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இரு அணிகளும் ஒரே ஓட்டங்களை பெற்று ஆட்டம் சம நிலையில் முடிவடைவது இதுவே முதல் முறை.

உலகளவில் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டில் 26 முறை போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.