bbc.co.uk navigation

ஸ்குவாஷ்: எகிப்திடம் பட்டத்தைத் தவறவிட்டது இந்தியா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 பிப்ரவரி, 2012 - 13:53 ஜிஎம்டி

சென்னையில் நடந்து முடிந்த 21 வயதுக்கு உட்பட்டோர் பங்குகொள்ளும் தேசிய அணிகள் இடையிலான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி எகிப்து பட்டம் வென்றுள்ளது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட இறுதிச் சுற்றில் எகிப்து இரண்டையும் இந்தியா ஒன்றையும் வென்றிருந்தன.

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்

இறுதிச் சுற்றில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ரவி தீட்சித்தை எகிப்தின் மார்வன் எல் ஷொர்பாஜி வீழ்த்தினார்.

ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை தீபிகா பல்லிகல் எகிப்தின் நூர் எல் ஷெர்பெனியை அற்புதமாக விளையாடி வென்றிருந்தார்.

ஸ்குவாஷ் விளையாட்டைப் பொறுத்தவரை இந்தியாவில் தரவரிசையில் முதலிடத்திலும், உலக அளவில் 14ஆவது இடத்திலும் தற்போது தீபிகா பல்லிகல் இருக்கிறார் .

இந்த ஆட்டத்தில் ஷெர்பெனிக்கு ஐந்து முறை மேட்ச் பாயிண்ட் இருந்தாலும், சளைக்காமல் போராடி தீபிகா இறுதியில் வென்றார்.

தீபிகா வெற்றியால் இரண்டு அணிகளும் சமநிலைக்கு வந்திருந்தன.

ஆதலால் இந்தியாவின் ரமித் டேண்டனுக்கும் எகிப்தின் கரீம் அப்தல் கவாத் என்ற வீரருக்கும் இடையில் நடந்த மூன்றாவது ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

கவாத் நிதானமாக விளையாடி ரமித்தை தோற்கடித்தார்.

சில கட்டங்களில் ரமித் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து புள்ளிகளை வெல்ல முடியாமல் அவர் திணறியதை உணரமுடிந்தது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.