bbc.co.uk navigation

இந்திய கால்பந்து பிரிமியர் லீக்-வீரர்கள் ஏலம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஜனவரி, 2012 - 17:08 ஜிஎம்டி

அடுத்த மாதம் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளில் பங்குபெறவுள்ள சர்வதேச வீரர்கள் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் பல அணிகளால் வாங்கப்பட்டனர்.இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பிரிமியர் லீக் கிர்க்கெட் போட்டிகள் போன்றே தற்போது பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஹெர்னன் க்ரெஸ்போ அதிகபட்சமாக 840,000 டாலர்களுக்கு வாங்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வென்ற இத்தாலிய அணியின் தலைவராக இருந்த ஃபாபியோ கனேவரோ 830,000 அமெரிக்க டாலர்களுக்கு சிலிகுரி அணியால் வாங்கப்பட்டார்.

பிரஞ்சு நாட்டு வீரர் ராபர்ட் பிரேஸ் ஹவுரா அணியால் எட்டு லட்சம் டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதே போல அர்ஜெண்டினா நாட்டி வீரர் ஹெர்மன் கிறெஸ்போ பராசத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆறு அணிகளைக் கொண்ட இந்த பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இதர முன்று அணிகளான கொல்கத்தா, துர்காபூர், மிட்னாபூர் மற்றும் ஹல்தியா ஆகியவையும் பல்வேறு சர்வதேச வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவில் கால்பந்து விளையாட்டு மேலும் பிரபலமாகிவரும் நிலையில், இந்த கால்பந்து பிரிமியர் லீக் போட்டிகள் மேலும் பல இளைஞர்களை கால்பந்து விளையாட்டை நோக்கி ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில், உள்நாட்டு அணிகள் பங்குபெறும் கால்பந்து போட்டிகளைவிட, வெளிநாட்டு லீக் போட்டிகளை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்று தெரியவந்ததை அடுத்து இந்த முன்னெடுப்பு என்று சொல்லப்படுகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் இருபது வெளிநாட்டு வீரர்களும் ஐந்து பயிற்சியாளர்களும் பல அணிகளால் வாங்கப்பட்டனர். இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்பட்டாலும், மாற்று கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

பெருமளவில் பணம் செலவு செய்து வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக, அந்தப் பணத்தை உள்நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று விமர்சனங்களும் வந்துள்ளன.

ஆனால் கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல எந்த விளையாட்டில் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டாலும், அது பல கோடி ரூபாய்கள் புரளும் கிரிக்கெட் விளையாட்டுக்கு சவால் விடமுடியுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இந்த இந்தியன் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளை பெற்றுள்ள நிறுவனம், இந்தப் போட்டிகள் ஐம்பது நாடுகளில் ஒளிபரப்பாகும் என்று கூறுகிறது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.