
இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற இதுவரை இந்தியாவிலிருந்து எந்த பளுதூக்கும் வீரரும் தகுதி பெறவில்லை.
புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் முழுமையான ஒரு இந்திய அணி கலந்து கொள்ளாததும், அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முழுமையான ஒரு அணி கலந்து கொண்டாலும் தகுதி பெறுவதற்கு தேவையான புள்ளிகள் கிடைக்காததுமே ஒலிம்பிக் போட்டிகளுகளில் இந்திய பளுதூக்கும் அணியினர் பங்குபெற முடியாமல் போனதற்கு காரணம் என்கிறார், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவரான தமிழ்ச்செல்வன்.
இருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பளுதூக்கும் போட்டிகளில் இந்திய அணியினர் முதல் ஏழு இடங்களுக்குள் வந்தால் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒருவர் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறக் கூடிய வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தமிழ்செல்வன் கூறுகிறார்.
ஆசியாவின் பல நாடுகளின் வீரர்கள் ஏற்கனவே லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பலர் கொரியப் போட்டிகளுக்கு வரக் கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும், அதன் காரணமாக இந்திய வீரர்கள் தகுதியடைய வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

உலக வீரர்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பளுதூக்கும் ஆண்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது என்றும் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டுகிறார்.
மத்திய மாநில அரசுகள் பளுதூக்கும் விளையாட்டுக்கு அளிக்கும் ஆதரவு போதிய அளவுக்கு இல்லை எனக் கூறும் அவர், மற்ற அனைத்து மாநிலங்களிலும் விடுதி வசதியுடன் கூடிய பளுதூக்கும் பயிற்சி மையம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அப்படியான ஒருங்கிணைந்த முழுமையான வசதி இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலிருந்து பல பளுதூக்கும் வீரர்கள் வந்துள்ளனர் என்பதும் அவர்களில் பலர் சர்வதேச அளவில் பதக்கங்களை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








