
விளையாட்டு அரசியல் உறவுகள் மேம்படுத்தும் என்று நம்பிக்கை
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே அரசியல் உறவுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத நிலையில், மிக அபூர்வமான வகையில் அமெரிக்க பல்கலைகழக பேஸ்பால் அணி ஒன்று கியூபாவுக்கு விஜயம் செய்துள்ளது.
அந்த அமெரிக்க பல்கலைகழக அணி கியூபாவில் மூன்று ஆட்டங்களில் விளையாடியது, அதில் இறுதி ஆட்டம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இந்தப் போட்டிகள் கியூபத் தலைநகர் ஹவானாவிலுள்ள லேட்டினோ அமெரிக்கா விளையாட்டரங்கத்தில் இடம்பெற்றன.
போட்டி நடைபெற்ற ஹவானா பேஸ்பால் மைதானத்தில் உற்சாகத்துக்கும் ஆரவாரத்துக்கும் குறைவில்லை. அரசியல் ரீதியான மோதல்களுக்கு அப்பாற்பட்டு இந்த மோதலுக்கு ஆதரவு கூடுதலாகவே இருந்தது. இவ்வளவுக்கும் இது மாணவர்களுக்கு இடையேயான ஒரு விளையாட்டுப் போட்டிதான்.
இந்தப் போட்டிக்கு கூட ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். இப்படியான போட்டிகள் நடைபெறுவது இந்த இரு நாட்டு உறவுகளில் ஒரு நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஒரு அறிகுறியாகக் கூட பார்க்கப்படுகிறது.
கியூபாவுடன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அரசியல் உறவுகளை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடனான வர்த்தக உறவுகளுக்கு தடை விதித்துள்ளது. இது போன்ற மாணவர்கள் விஜயத்துக்குக் கூட புஷ் அவர்கள் அதிபராக இருந்த போது தடை இருந்தது. ஆனால் பராக் ஒபாமா அவர்களின் ஆட்சியின் கீழ் இவை மெல்ல மாறி வருகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் இருந்து தனியாரால் பிரத்தியேக விமான சேவைகள் கியூபாவுக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன.
இருந்தாலும் இரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலை என்பது இன்னமும் ஒரு நெருடலான விஷயமாகவே உள்ளது. இருந்த போதிலும் மென்மையான வகையில் இராஜதந்திர முன்னெடுப்புகள் விளையாட்டின் மூலம் செய்யப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.








