
துவக்க மற்றும் நிறைவு விழா நடைபெறவுள்ள அரங்கம்
அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதான பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அச்சங்களையும் பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் கோடைக் காலத்தின் போது, பிரிட்டனுக்கான அச்சுறுத்தல் முன்பு இருந்த அளவிலிருந்து சிறிது குறைக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பெரும் அச்ச சூழலிலேயே நடைபெறும் முதல் போட்டிகளாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட்கள் நெருங்க நெருங்க அது தொடர்பிலான சவால்கள் மேலும் மேலும் தெளிவாகி வருகின்றன. போட்டிகளின் போது விளையட்டு அரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க ஜி 4 எஸ் எனும் தினியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் பாதுகாப்புக்காக 10,000 பேரை ஈடுபடுத்தும். இருந்தாலும் பாதுகாப்பு தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் போது அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
எனினும் ஒலிம்பிக் போட்டிகளின் போது, பாதுகாப்பு பணியில் சுமார் ஐயாரம் ஆட்கள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படக் கூடும் என பிபிசி அறிகிறது.

நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ள அரங்கம்
ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் கூடுதலான இந்த ஆட்பலம் எங்கிருந்து வரப் போகிறது, அதற்கான பணத்தை யார் கொடுப்பது என்பதே.
பிரிட்டனின் இராணுவம் சில சிறப்பு உதவிகளை அளிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும், அப்படியான பணிக்கு எவ்வளவு பேர் அழைக்கப்படுவார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
தமது வீரர்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக வந்துள்ள செய்தி குறித்து அமெரிக்கத் தூதரகம் கருத்து கூற மறுத்துவிட்டது.
எனிமும் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்பு குறித்த திட்டங்களில் அமெரிக்கா கூடுதல் ஆர்வம் எடுத்துக் கொள்கிறது என்றும், தமது வீரர்களை பாதுகாக்க நூற்றுக் கணக்கான பாதுகாப்பு பணியாளர்களை அனுப்ப அமெரிக்கா எண்ணுகிறது என்பதும் அறியக் கூடியதாக உள்ளது.








