
பாக்கூ நகரில் உலக குத்துச் சண்டைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்குபெற இதுவரை நான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு புதுடில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 64 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற மனோஜ் குமார், சர்வதேச அரங்கில் முதல் முறையாக போட்டியிடும் தேவேந்திரோ சிங், புதுடில்லிப் போட்டியில் வென்கலம் வென்ற ஜெய் பகவான் மற்றும் ஆசிய விளையட்டுப் போட்டியின் 60 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற விகாஸ் கிருஷண் ஆகியோர் லண்டன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அசர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்கூவில் நடைபெற்று வரும் உலகக் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கு பெற்ற இவர்கள் அனைவரும் அதில் காலிறுதிக்கு தேர்வு பெற்றுள்ளதை அடுத்து லண்டன் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
பாக்கூவில் நடைபெற்று வரும் உலகக் குத்துச் சண்டைப் போட்டியில், வெல்டர் வெயிட் பிரிவில் பங்குபெறும் 19 வயது விகாஸ் கிருஷண் துருக்கி நாட்டு வீரர் ஆண்டர் சிபாலை வெற்றி கொண்டார். 2010 ஆம் ஆண்டு உலக இளையோர் குத்துச் சண்டைப் போட்டியில் பட்டத்தை வென்றிருந்த கிருஷண் துருக்கிய வீரரை 14-7 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றார்.
ஆனால் அயர்லாந்து நாட்டின் டேவிட் ஜாய்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெய் பகவான் 32-30 என்கிற கணக்கில் தோல்வியடைந்தார்.
அதே போன்று தேவேந்திரோ சிங்கும், மனோஜ் குமாரும் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறினர். ஆனாலும் அந்த நிலையை எட்டியதால் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
பாக்கூவில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த மாதம் 10 ஆம் தேதி வரை இடம்பெறுகின்றன.








