bbc.co.uk navigation

லண்டன் ஒலிம்பிக்ஸ்: "தடகளப் பாதைகள் தயார்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 அக்டோபர், 2011 - 12:48 ஜிஎம்டி
போட்டிகளுக்கான தடகளம் தயார்

தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ள பாதைகள்

அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தடகளப் பாதைகள் அமைக்கும் பணி முடிந்து விட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 80,000 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்கக் கூடிய வசதிகளை கொண்ட முக்கிய விளையாட்டு அரங்கிலேயே தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த அரங்கில்தான் தடகளப் பாதைகள் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

இத்தாலிய நிறுவனமான மோண்டோ இந்த தடகளப் பாதையை அமைத்துள்ளது. செயற்கை ரப்பரால் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையானது, தடகள வீரர்கள் வேகமாக ஓட வழி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இதே போன்று அமைக்கப்பட்ட ஓடு பாதையில் ஐந்து உலக சாதனைகளை படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று லண்டன் போட்டிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தடகளப் பாதையிலும் குறைந்தது ஐந்து புதிய சாதனைகள் படைக்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

அரங்கப் பணிகள் தொடருகின்றன

முக்கிய விளையாட்டரங்கம்

முக்கிய விளையாட்டு அரங்கம்

தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த முக்கிய விளையாட்டு அரங்கில்தான் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இடம்பெறும். மேலும் உடல் நலக்குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறணாளிகள் பங்கு பெறும் போட்டிகளும் இந்த அரங்கிலேயே நடைபெறவுள்ளது.

அரங்கத்தில் உள்ள தடகள பாதையை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாக லண்டன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், முழு அரங்கத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.

இந்த அரங்கத்தை கட்டி முடிக்கப்படும் போது, அதன் கட்டுமானத் தொகை 486 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.