
பறவைக்காய்ச்சல் வைரஸ்
உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு ஒன்று வியாழனன்று ஜெனிவாவில் துவங்கியிருக்கிறது. H5N1 என்று மருத்துவ உலகிலும் பறவைக்காய்ச்சல் என்று பரவலாகவும் அறியப்படும் வைரஸ் தொற்று குறித்து எந்த அளவு ஆராய்ச்சி நடத்தப்படவேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் பிரதான நோக்கம்.
அமெரிக்காவிலும் நெதெர்லாந்திலும் இது தொடர்பில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக மனிதர்கள் மத்தியில் மிக எளிதில் பரவக்கூடிய பறவைக்காய்ச்சல் வைரஸின் ஒரு குறிப்பிட்ட வகை உருவாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் நெதெர்லாந்து ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வின் முடிவுகளை முழுமையாக வெளியிடவேண்டாம் என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அந்த ஆய்வின் முடிவுகள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.
இதைத்தொடர்ந்து உலகளாவிய அளவில் பறவைக்காய்ச்சல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் அனைவரும் தங்கள் ஆய்வை இரண்டுமாதங்கள் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தனர்.
ஆய்வா; ஆபத்தா?
பறவைக்காய்ச்சலை தோற்றுவிக்கும் H5N1 ரக வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று கூறும் விஞ்ஞானிகள், இது குறித்த ஆய்வுகள் செய்யவேண்டியது மிகவும் அவசியம் என்று வாதாடிவருகிறார்கள்.
ஆனால் இப்படியான ஆய்வில் உருவாக்கப்படும் புதிய மரபணு மாற்றப்பட்ட பறவைக்காய்ச்சல் வைரஸ் தவறானவர்கள் கையில் கிடைத்தால் அது பேராபத்தில் முடியலாம் என்பதால் இந்த ஆய்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று மற்ற பிரிவு விஞ்ஞானிகள் எதிர்க்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் நெதெர்லாந்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காரணம் பறவைக்காய்ச்சல் வைரஸானது ஒரு வகை விலங்கிடமிருந்து மற்றவகை விலங்குக்கு அவ்வளவு எளிதில் பரவாது. அதாவது, தற்போதைய நிலையில் பறவைக்காய்ச்சல் வைரஸானது சாதாரணமாக பறவைகளிடமிருந்து மனிதனுக்கு பரவாது. ஆனால் அமெரிக்க மற்றும் நெதெர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கிய புது ரக பறவைக்காய்ச்சல் வைரஸானது பாலூட்டி விலங்குகள் மத்தியில் எளிதில் பரவக்கூடியதாக இருந்தது. மேலும் அதனால் தாக்கப்பட்ட மனிதர்களில் நூற்றுக்கு 60 சதவீதமானவர்கள் இறக்க நேரும் வாய்ப்பும் இருந்தது.
இந்த பின்னணியில் இன்று துவங்கியிருக்கும் மாநாடு இந்த ஆய்வின் சாதக பாதகங்களை விரிவாக ஆராய இருக்கிறது.
இந்த மாநாட்டின் முடிவில் அனைத்து தரப்பையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தம் உருவாவது கடினம் தான். அதேசமயம், இந்த ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதிலும் அவற்றின் முடிவுகளை வெளியிடுவதிலும் ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பது தொடர்பில் ஒருவித இணக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.








