Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 16:50 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மூதூர் கொலைகள்-மறுவிசாரணை இல்லை
 
இலங்கையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் ஏ சி எஃப் தொண்டு அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வழக்ககின் விசாரணை மீண்டும் இடம்பெறாது என்று அந்நாட்டின் அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்
அப்போது கொலை செய்யப்பட்ட 17 பேரில், 16 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம். அவர்கள் அனைவரும் ஏ சி எஃப் எனும் பிரெஞ்ச் தொண்டு அமைப்பின் பணியாளர்கள். அவர்கள் சுனாமிக்கு பிறகான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

கொலை செய்யப்பட்ட இவர்களில் 15 பேரின் சடலங்கள் தலையில் குண்டுக் காயங்களுடன் ஏ சி ஃப் அலுவலக வளாகத்தில் காணப்பட்டன. மற்ற இருவரது சடலங்களும் அருகில் இருந்த ஒரு வாகனத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

அந்தச் சமயத்தில் மூதூர் பகுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும் இவர்களை சுட்டுக் கொன்றவர்களின் அடையாளம் ஒரு போதும் திட்டவட்டமாக குறிப்பிட்டு காட்டப்படவில்லை.

அப்போது நடைமுறையில் இருந்து, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை கண்காணித்துக் கொண்டிருந்த ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள், இந்தக் கொலைகளுக்கு பாதுகாப்பு படையினரே காரணம் என்று முதலில் கூறினர். ஆனால் பின்னர் அதை மறுதலித்தனர்.

பிறகு 2008 ஆம் ஆண்டு யு டி எச் ஆர் எனும் மனித உரிமைகளுக்கான பல்கலைகழக ஆசிரியர்கள் அமைப்பு, இந்தக் கொலைகளை இரண்டு போலீசாரும் ஒரு ஊர்காவல்படையினருமே செய்ததாகத் தாங்கள் நம்புவதாக தெரிவித்தனர்.

ஆனால் ஒரு ஆண்டுக்கு பிறகு இந்தக் கொலைகள் மற்றும் இதர வழக்குகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு நாட்டின் இராணுவம் மற்றும் கடற்படையினர் ஆகியோர் மீது குற்றம் இல்லை என்று தெரிவித்த போதிலும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

தற்போது மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையில், இந்தக் கொலைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றும், உண்மையைக் கண்டு அஞ்சியதாலேயே அரசு யாரையும் நீதியின் முன்னர் நிறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஆனால், அதிகாரபூர்வமான ஒரு விசாரணை இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது குற்றம் இல்லை என்று கூறிவிட்டதால், இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும், இது தொடர்பில் மேலும் ஒரு விசாரணை தேவையில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியான லக்ஷமண் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்தினரால் அட்டூழியங்கள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இலங்கை மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இருந்தாலும் கடந்த திங்கட்கிழமை இலங்கை அரசு, தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில் பொதுமக்கள் பெரும்பாலும் கொல்லப்படுவதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று அது தெரிவித்தது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள