|
ஆஸ்திரேலிய அகதிக் கொள்கை பற்றி விமர்சனம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தஞ்சம் கோருவோரை கட்டாயமாகத் தடுத்து வைப்பதற்கான ஆஸ்திரேலியாவின் கொள்கையை ஒரு புதிய அறிக்கை வன்மையாக கண்டித்துள்ளது.
தஞ்சம் கோரி வருபவர்களை நேரடியாகவே சிறைவைப்பதற்குப் பதிலாக வேறு பல சாதகமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஏனைய வேறு பல நாடுகள் தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதை முதல் தெரிவாகக் கொள்ளாத நிலையில், ஆஸ்திரேலியாவும் அவர்களை விடுதிகளில் தங்க வைக்க வேண்டும் என்றும், தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பது என்பது இறுதித் தெரிவாக மாத்திரமே இருக்க வேண்டும் என்றும் மெல்பேர்ணின் லா த்ரோப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கூறியுள்ளது. தஞ்சக் கோரிக்கையாளர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படும் காலப்பகுதியில் அவர்களை பொதுவான சமூகத்துக்குள் வாழ விடுவது, அவர்களது விரக்தி உணர்வை பெருமளவு குறைக்க உதவும் என்று பல்கலைக்கழகத்தின் அந்த அறிக்கை கூறுகிறது. சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் வருபவர்களை கட்டாயமாக தடுத்துச் சிறைவைப்பது என்பது 1990 களின் முன்பகுதி முதல் நடந்துவருகின்றது. எல்லைக்கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது என்று அரசாங்கம் வலியுறுத்துகின்றது. ஆனால், தமது தஞ்சக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் காலத்தில் சிறை வைக்கப்படுபவர்களின் உளவியல் சுமையைக் குறைக்க சமூக மட்டத்திலான மாற்று ஏற்பாடுகள் உதவும் என்று இந்த புதிய அறிக்கையை எழுதிய றொபின் சாம்சன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை மிகவும் சர்ச்சைக்குரிய காலம் இது. இந்தத் தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாம்களில் தற்கொலையும், தன்னைத்தானே வருத்திக் கொள்வதும் அதிகரித்து வருவது குறித்து தேசிய குறைகேள் அதிகாரி விசாரணையை ஆரம்பித்துள்ளார். அதேவேளை 800 தஞ்சக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உடன்படிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் சட்ட ரீதியிலான சவால்களை விடுத்துள்ளன. இதற்குப் பதிலாக தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்ட 4000 அகதிகளை மலேசியா ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கும். இந்த உடன்படிக்கையின் கீழ் படகுகளில் வந்த ஒரு தொகுதி மக்களை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும்காட்சிகளை ஆஸ்திரேலியா யூ டியூப் இணையத்தளத்தில் பிரசுரிக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு படகுகளில் வந்த அகதிகளை விமானம் மூலம் மலேசியாவுக்கு ஆஸ்ரேலியா அனுப்பி வைக்கும் காட்சிகள் அதில் இடம்பெறும். இந்த உடன்படிக்கையின் மூலம் அகதிகள் மோசமான கடற்பயணத்தை மேற்கொண்டு மூலம் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவின் வடகரையை வந்தடைவதை தடுக்க
முடியும் என்றும், ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||