Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:12 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
'செய்தியாளர் மீதான தாக்குதல்'- கண்டனங்கள்
 
தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் குகநாதன்
கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தித்தாளின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பல்வேறு அமைப்புகளும் கண்டித்துள்ளன.

செய்தியாளர்கள் மீதான வன்முறை அலையை மீண்டும் ஆரம்பிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஃப் என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.

'எவரும் கைது செய்யப்படவில்லை'

யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ள குகநாதனின் உடல் நிலை குறித்து 36 மணித்தியாலங்கள் கழிந்த பின்பே தெரிவிக்க முடியும் என வைத்தியர்கள் கூறியிருப்பதாக உதயன் செய்தித்தாளின் நிர்வாகப் பணிப்பாளராகிய ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்ற போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் சரவணபவன் கூறினார்.

மூத்த செய்தியாளராகிய குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்திருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதையே குகநாதன் மீதான இந்தத் தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றது.

'ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை'- ரம்புக்வெல்ல

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் இராணுவ முகாமில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
அங்கு சென்றிருந்தார்.

ஊடக அமைச்சர் ரம்புக்வெல்ல- கோப்பு படம்
ஊடக அமைச்சர் ரம்புக்வெல்ல- கோப்பு படம்
குகநாதன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டபோது, இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்று ரம்புக்வெல்ல பதிலளித்தார்.

எனினும் இத்தகைய சம்பவங்கள் குறித்து தாங்கள் அக்கறை செலுத்த வேண்டும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.

இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி, அதனை புறந்தள்ளி விடுவதற்கு தான் முயற்சிக்கவில்லை என்றும். இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள