Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஜூன், 2011 - பிரசுர நேரம் 13:50 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
கிழக்கில் மரண சான்றிதழ் வழங்கும் பணி
 
சான்றிதழ் பணி
சான்றிதழ் பணி

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2010 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் யுத்த சூழல், இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போன அல்லது இறந்தவர்களின் மரணங்களை பதிவு செய்து மரண சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பாக ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி ஒருவர் காணாமல் போயிருந்தால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு 6 மாதங்களின் பின்னர் மரண விசாரணை நடைபெற்று மரணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மரண சான்றிதழ் பதிவாளரினால் வழங்கப்படுகின்றது.

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள திட்டத்தின்படி மரண விசாரணையில் இல்லாமல் இலகுவான முறையில் மரண சான்றிதழ்களை பெறக் கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் தற்போது தேசிய நல்லிணக்க அமைச்சும், ஐ.நா. அபிவிருத்தி திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவைகளில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் யுத்த காலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது உறவினர்களின் மரணங்களை பதிவு செய்வதற்காக வந்திருந்தார்கள்.

உறவுகளை தேடும் உள்ளங்கள்
உறவுகளை தேடும் உள்ளங்கள்

பாதுகாப்பு தரப்பு மற்றும் ஆயுதக் குழுக்களினால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போய் வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமது உறவுகள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இழந்த நிலையிலேயே மரண சான்றிதழ்களைப் பெறுவதற்காக தாம் வந்திருந்ததாக அவர்களில் பலரும் கூறுகின்றார்கள்.

மரண சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களையும் தாம் எதிர்நோக்குவதாகவும் அவர்களில் சிலர் கூறுகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்களில் ஒரு சாரார் மரண சான்றிதழ்களைப் பெறுவதில் தற்போது ஆர்வம் கொண்டிருந்தாலும் மற்றுமொரு சாரார் காணாமல் போன உறவுகள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை காரணமாக அதில் ஆர்வம் காட்டவில்லை.

ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரியான சட்டதரணி ஏ.ஆர்.எம்.சுல்பி "இங்கு பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரம் பிரதேச செயலகத்திலும், கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்களிடமிருந்து ஆட்சேபணை மற்றும் எதிர்ப்புகள் இல்லாத பட்சத்தில் இருமாத காலத்திற்குள் மரண சான்றிதழ்கள் கிழக்கு மாகாண மேலதிக பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும்" என்றார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள