Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 ஜூன், 2011 - பிரசுர நேரம் 18:17 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
"திருப்பி அனுப்பினால் ஆபத்து"
 
பிரிட்டனின் குடிவரவு அதிகாரிகள்
பிரிட்டனின் குடிவரவு அதிகாரிகள்
பிரிட்டனில் அகதித் தஞ்சம் கோரி, அது நிராகரிக்கப்பட்ட சுமார் 20 தமிழர்கள் வியாழக் கிழமை(16.6.11), சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில் இவர்களை அனுப்பக் கூடாது என்கிற குரல்களும் எழுந்துள்ளன.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் பழிவாங்கப்படலாம் என்கிற நிலை இருப்பதால் பிரிட்டிஷ் அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுள்ளன.

பிரிட்டனின் குடிவரவு நடைமுறையின் படி ஒரு நபர் மூன்று முறை அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கலாம். மூன்றாவது முறை அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு அந்த நபர் திருப்பி அனுப்பப்படுவார்.

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டோர் பல்வேறு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை இவர்களை பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை குறித்து குடிவரவு அதிகாரிகள் கருத்துக் கூற மறுக்கின்றனர்.

இலங்கைக்கு தாங்கள் மீண்டும் அனுப்பப்பட்டால், அங்கே தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று திருப்பி அனுப்பப்படவுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதே தமக்கு அப்படியான அச்சுறுத்தல்கள் வருவதாக, தடுப்பு முகாமில் உள்ள ஒரு 30 வயதுடைய ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனக்கு பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே தான் பிரிட்டன் வந்ததாக இவர் கூறுகிறார்.

இவருக்குத் திருமணமாகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது வீட்டாருக்கு தன் பிரச்சனை குறித்து முழுமையாகத் தெரியாது என்றும் இவர் கூறுகிறார்.

நாடு கடத்தப்படுவோம் என்று தெரியவந்தவுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

வியாழக்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐம்பது வயதைத் தாண்டிய மற்றொருவர் தனது கணவர் தமிழ் ஆயுதக் குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்ட பிறகுதான், தான் பிரிட்டன் வரும் நிலை ஏற்பட்டது என்றும், தற்போது இலங்கையின் தமக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

(இவர்களின் பாதுகாப்பு கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை)

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள