|
யாழ்ப்பாண வன்முறை இடம்பெற்று 30 ஆண்டுகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன், 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்செயல்கள், இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தது. நாட்டில் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்துக்கான ஒரு முன்னெடுப்பு என்று கூறப்பட்டு மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தல்களை ஜூன் மாதம் நான்காம் தேதி நடத்த இலங்கை அரசு முன்வந்தது. அப்போது கொழும்பில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர்களை வடக்கே யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைத்து தேர்தலில் தமக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினர் நாச்சிமார்கோயிலடி என்ற இடத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த நூற்றுக்கும் அதிமான போலீசார் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன்பிறகு நடந்தேறிய வன்செயல்களில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாண நூலகம், பூபாலசிங்கம் புத்தகக்கடை உட்பட பல இடங்கள் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் யாழ் கிளை தீவிர முயற்சிகளை எடுத்தது என்று அந்த அமைப்பில் அப்போது உறுப்பினராக இருந்த சீலன் கதிர்காமர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் மாதம் முதல் வாரம் இடம் பெற்ற இந்த வன்செயல்கள் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைத்தது என்று கூறும் கதிர்காமர், அந்த வன்செயல்களே 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னோடியாக இருந்தது என்றும் கூறுகிறார்.
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் இடம்பெற்ற வன்செயல்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால், அதிகாரப்பகிர்வு நடைமுறையில் செயல்படுத்தப்பட ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் சீலன் கதிர்காமர் கூறுகிறார். தற்போதைய சூழலில், அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்கள் விழிப்புணர்வுடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் மக்கள் இதை மனதில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கருத்து வெளியிடுகிறார். யாழ்ப்பாண மக்களை கல்வி ரீதியில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கியமாக தேவைப்படும் நடவடிக்கை எனவும் கூறும் அவர், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளின் தரமும் குறைந்து காணப்படுகிறது எனவும் கூறுகிறார். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||