|
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மும்பை நகரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற மோதல்கள் 62 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முடிவுக்கு
வந்துள்ளது.
இறுதியாக பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த தாஜ் மஹால் ஹோட்டலும் இன்று காலை மீட்கப்பட்டது. மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். அதேபோல், நாரிமன் ஹவுஸ் பகுதியில் இருந்த யூத மையமும் வெள்ளி இரவு பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். அந்தக் கட்டடத்தில் இருந்த ஐந்து பிணைக் கைதிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ ஒருவரும் அதில் கொல்லப்பட்டார். ஏற்கெனவே, நேற்று பிற்பகலில், ஓபராய்-டிரைடன்ட் ஹோட்டல்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டன. இதுவரை மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் 195 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 370-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். தாஜ் ஹோட்டலில் சனி அதிகாலை முதல் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் கடும் மோதலில் ஈடுபட்டார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மற்றும் கடற்படைக் கமாண்டோக்களுடன் சனிக்கிழமை காலை ராணுவ கமாண்டோக்களும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து தாக்குதல் மேலும் உக்கிரமடைந்தது. ஹோட்டலின் முதல் தளத்தில் இருந்த ஓர் அறையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர்.. கமாண்டோக்கள் நெருங்கிய நேரத்தில், அவர்கள் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அதையும் மீறி கமாண்டோ படையினர் முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார்கள். சனிக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் அந்தப் பணி முடிவடைந்தது. அந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புப்படைத் தலைவர் ஜே.கே. தத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்த பயங்கரவாதிகளில் ஒருவரது சடலம், ஜன்னல் வழியாக வெளியே கீழ் தளத்தில் விழுந்ததை தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு மூலம் காண முடிந்தது.
அதே நேரத்தில், தற்போது தாஜ் ஹோட்டலில் ஒவ்வொரு அறையாக தேடுதல் பணி நடைபெற்றுவருவதாகவும், அறைகளில் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கும் விருந்தினர்கள் ஜன்னல் வழியாக அடையாளம் காட்டலாம் என்றும் தத் கூறினார். அந்த மோதலில், கமாண்டோ படையைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் உயிரிழந்தார். தாஜ் ஹோட்டல் கீழ் தளததில் தேடுதல் பணி நிறைவடைந்ததும், பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிக் குழுவினரும் சிறிது உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அங்குள்ள அறைகளும், உணவு விடுதியும் ரணகளம் போல காட்சியளித்தது. தரை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. தாக்குதல் பணி முடிவடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் உள்ளே அறைகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டார்கள். மேலும், பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான சடலங்களும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படையினர் வசம் நாரிமன் ஹவுஸ் நேற்றிரவு பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாரிமன் ஹவுஸ் கட்டடம் மும்பை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு 48 மணி நேர முற்றுகைக்குப் பிறகு, இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றார்கள். ஐந்து மாடிக் கட்டடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை மேல் தளம் உள்பட பல்வேறு முனைகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். கிரானைட் லாஞ்சர்கள் மூலம் சுவர்களைத் தகர்த்தெறிந்தார்கள். நான்காவது தளத்தில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அந்தக் கட்டடத்தில், மூன்று சடலங்களும், நான்காவது மாடியில் வேறு இரு சடலங்களும் கிடந்தன. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்த அவர்கள் ஐந்து பேரும் இஸ்ரேலிய நாட்டவர்கள். அவர்களை பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் இறுதிக்கட்ட தாக்குதல் நடத்திய நேரத்திலும், துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியின்போது, கமாண்டோ கஜேந்திர சிங் உயிரிழந்ததாக ஜே.கே. தத் தெரிவித்தார். 18 வெளிநாட்டவர்கள் மும்பை மோதல்களில், 16 பாதுகாப்புப் படையினர் உள்பட 170 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் வெளிநாட்டவர்கள் 18 பேர். அவர்களில் மூன்று இஸ்ரேலியர்கள், மூன்று ஜெர்மானியர்கள். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் தலா ஒருவர் கொல்லப்பட்டார்கள் என மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் பிரஜைகள் என்று செய்திகள் வெளியாகியிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மகாராஷ்டிர முதல்வர், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார். உயிருடன் பிடிபட்ட ஒரு பயங்கரவாதி மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். தாஜ், ஒபராய்-டிரைடன்ட் ஹோட்டல்கள், நாரிமன் ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களிலும் பத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாகவும், அவர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு, ஒருவர் பிடிபட்டுள்ளதாக ஜே.கே. தத் தெரிவித்தார். பாகிஸ்தான் நிலையில் திருப்பம் இதனிடையே, இந்தியா கேட்டுக் கொண்டபடி மும்பை சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவரை புதுடெல்லிக்கு அனுப்ப சம்மத்திருந்த பாகிஸ்தான் தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டது. ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுஜா புஷாவுக்கு பதிலாக, ஐஎஸ்ஐ பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்குச் சென்று, மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவார் என்று இஸ்லாமாபாத்தில் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஜர்தாரி, பிரதமர் யூஸுஃப் ராஜா கிலானி, ராணுவத் தளபதி கயானி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடலோரத்தில் தேடுதல் பணி இதனிடையே, பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக மும்பை நகருக்கு வந்து சேர்ந்ததாக பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வருவதை அடுத்து, கடலோரப் பகுதிகளில் இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல் படையினரும் தீவிரமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். மும்பை கடலோரப் பகுதியில் ஒரு சடலத்துடன் தனித்துவிடப்பட்டிருந்த படகு ஒன்றைக் கைப்பற்றியிருப்பதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் மனோகர் நம்பியார் தெரிவித்துள்ளார். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||