|
அனுமதி இல்லாமல் கனிமவளம் தோண்டியெடுப்பு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலைப்பகுதியில் அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட் கனிமம் தோண்டும் நிறுவனமான, மால்கோ நிறுவனம் , கடந்த சுமார் பத்தாண்டுகளாக உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி , இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரும் பொது நல வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 20 ம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, உரிய அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட நிறுவனம், இந்த உரிமம் பெறப்படும் வரை இந்த சுரங்கத்தில் தோண்டும் பணிகளை நிறுத்திவைப்பதாக உறுதியளித்திருப்பதாக எமது சென்னை செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்த பொது நல வழக்கைத் தொடுத்த சேலம் மாவட்டம் பியூஷ் சேத்தியா என்பவருக்காக வாதாடிய வழக்குரைஞர் நாகசைலா, இந்த நிறுவனம் சுரங்க மற்றும் கனிம சட்டத்தின் கீழ் பெற்ற நீண்ட காலகுத்தகை 1998ல் முடிந்ததாகவும், அதன் பின்னர் அந்த குத்தகையை புதுப்பிக்க அது பெற்ற அனுமதி , முதல் குத்தகை காலத்தில் வந்த பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களுக்குட்பட்டே தரப்பட்டதாகவும், ஆனால் இந்த சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் நிறுவனம் உரிய அனுமதிகளைப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்த சுரங்கம் அமைந்திருக்கும் கொல்லிமலை, வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இலக்கியங்களில் இடம் பெற்ற ஒரு இடம் என்று கூறிய அவர், மேலும், இந்த மலைப் பிரதேசம், உயிரியல் பன்மைத்தன்மை கொண்ட ஒரு பகுதி என்றும், தொடர்ந்து சுரங்கம் தோண்டப்படுவதன் விளைவாக இந்த மலைப்பகுதி ஒரு பள்ளத்தாக்குப் பகுதியாக மாறிவிட்டது என்றும் கூறினார். இந்த வழக்கு குறித்து மால்கோ நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதன் சார்பாக பேசவல்ல அதிகாரி ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில், தமது நிறுவனம் கொல்லிமலைப்பகுதியில் பாக்சைட் தோண்டும் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஏற்கனவே விண்ணப்பித்திருப்பதாகவும், இந்த அனுமதி தரப்படலாம் என்று சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வல்லுநர் குழு பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த அனுமதி குறித்து முறையான தகவல் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சகத்துக்கு இந்த அனுமதியை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தியிருப்பதாகவும், இதற்கிடையே , இந்த முறையான அனுமதி பெறப்படும்வரை, பாக்சைட் தோண்டும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்க மால்கோ தானாகவே முடிவு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் தெரிவிக்கிறது. இந்த மால்கோ நிறுவனம், பிரிட்டனில் இருந்து இயங்கும் வேதாந்தா ரிசோர்சஸ் என்ற கனிம பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியக்கிளை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த செய்தியை இங்கு கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||