|
செய்தியரங்கம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதற்கு இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன். மூன்று நாள் இந்தியப் பயணமாக, வெள்ளிக்கிழமை இரவு மும்பை வந்த ஹிலாரி கிளிண்டன், கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த முக்கிய இடமான தாஜ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இன்று சனிக்கிழமை காலை, அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். மகளிர் சுய உதவிக்குழுவினருடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய – அமெரிக்க உறவுகள், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை, பயங்கரவாதம் உள்பட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் கேள்விக்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன், இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் துவக்குவது முழுக்க முழுக்க அந்த நாடுகளின் தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்தார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் அமெரி்க்கா உறுதி பூண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் தாங்கள் உறவு வைத்திருக்கும் மற்ற நாடுகளும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி வரும் ஹிலாரி அவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திங்கட்கிழமை, இந்தியத் தலைவர்களைச் சந்தித்து, அணுசக்தி பரவல் தடுப்பு, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்துகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூதூர் கொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் - ஏசிஎப்
இலங்கையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆக்ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் என்ற சர்வதேச பிரெஞ்ச் தொண்டு நிறுவனத்தின் இலங்கை பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து அரசாங்கம் நடத்திய விசாரணையில் கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை. மூதூரில் நடைபெற்ற இந்த கொலைகளில் சம்பந்தபட்டவர்களை கண்டுபிடிக்க அரசாங்கத்திடம் மனம் இல்லை என்று ஆக்ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. விசாரணை குழுவின் அறிக்கையில் உள்ள அம்சங்கள் தங்களுக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாகாவும், இந்த விசாரணைக்கு இருக்கும் அரசியல் பின்புலத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், அறிக்கையில் ஆக்ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் அமைப்பினர் மெத்தனமாக செயற்பட்டார்கள் என்று கூறப்பட்டிருப்பது கண்டு தங்களுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை என்று அவ்வமைப்பு கூறியுள்ளது. மேலும் இத்தகைய அவதூறான குற்றச்சாட்டை தாங்கள் சர்வதேச விசாரணையில் இல்லை என்று நிரூபிப்போம் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது. அத்தோடு விசாரணை குழுவின் தோல்வியை வைத்து பார்க்கும் போது, ஒரு சர்வதேச விசாரணையால் மட்டுமே உண்மையை கொண்டு வரமுடியும் என்பது இப்போது தெளிவாக தெரிவதால், சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் இதனை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஆக்சன் அகைன்ஸ்ட் ஹங்கர் அமைப்பு கூறியுள்ளது. மூதூரில் இடம்பெற்ற கொலைக்கு பின்னர் இடம்பெற்ற மூன்று நீதி விசாரணைகளை தங்கள் அமைப்பு கூர்ந்து கவனித்து வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வந்த விசாரணையின் போது நீதி விசாரணையில் ஏராளமான குறுக்கீடுகள், திரைமறைவு வேலைகள், ஏராளமான தப்பு தவறுகள் இடம்பெற்றதாகவும் ஆக்சன் அகைன்ஸ்ட் ஹங்கர் அமைப்பு கூறுகிறது. மூதூரில் கொலைகள் இடம்பெற்ற போது, அதில் இராணுவம் ஈடுப்பட்டிருந்த்து என்று தாங்கள் நம்புவதாக ஐரோப்பிய போர் நிறுத்தக்கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசாங்கத்தின் விசாரணையானது இராணுவத்திற்கு சம்பந்தம் இல்லை என கூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு கோரி போராட்டம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினர் இம்மாதம் முதலாம் தேதி முதல் மட்டக்களப்பு நகரில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்தப் போராட்டத்தில் இன்றுடன் 18 வது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த 4 வருடங்களாக தங்களைப் போல் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் இது வரை நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டும் இப்பட்டதாரிகள், தங்களுக்கு வேலை வாயப்பு கிடைக்கும் வரை இப்போராட்டததை தொடர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக சுட்டிக் காட்டும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்
தலைவரான குமாரசாமி ஜெயராஜா எதிர் வரும் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சாதகமான முடிவொன்றை தாம் எதிர் பார்ப்பதாகவும்
கூறுகின்றார். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||