http://www.worldservice.com/tamil

21 ஏப்ரல், 2005 - பிரசுர நேரம் 12:57 ஜிஎம்டி

மலையக காமன் கூத்து

காமன் கூத்து

அருகி வரும் இந்த கலையினைக் கற்றவர்கள், தொழிலாய் ஆடுபவர்களின் எண்ணிக்கை நவீன காலத்தில் குறைந்து கொண்டு வருகையில் காமன் கூத்தே தன் வாழ்வு, மூச்சு என ஜீவித்து வரும் காமன் கூத்து வாத்தியார் செவன பிச்சையாவை இலங்கையின் ஹட்டன் நகர தேயிலைத் தோட்ட குடியிருப்பொன்றில் சந்தித்த நமது தயாரிப்பாளர் அன்பரசனின் சிறப்புப் பெட்டக நிகழ்ச்சி.

காமன் கூத்து வரலாறு என்ன. அதாவது சிவபெருமானின் தவத்தை கலைக்க மற்றவர்களால் அனுப்பப்பட்ட மன்மதனை காமதேவனை சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் எரித்துச் சாம்பலாக்க கண்ணீர் விட்டு அழுது புரள்கிறால் மதனின் மனைவி ரதி.

கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார்.

காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தின் முக்கிய அம்சங்களாகும்.

காமன் கூத்தினை ஒருவர் மட்டும் செய்ய முடியாது, இசையும் நடனமும் பாட்டும் கலந்ததுதான் காமன் கூத்து, என்கிறார் காமன் கூத்து வாத்யார் செவன பிச்சையா.

வட இந்தியாவில் இது ஹோலி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இந்தக் கலை மலையக மக்களின் கலைகளையும், தெய்வ வழிபாட்டையும் ஒன்றிணைத்தாக இருக்கிறது.

இதை ஒரு கலைக் கூத்தாக மட்டும் நினைக்காமல் சமயச் சடங்காகவும் அதாவது, நேர்த்திக் கடன் செய்வோர் காமன் கூத்தில் ஒரு பாத்திரம் ஏற்று ஆடுவதும் கூட வழக்கமாயிருக்கிறது.

11 நாள் அல்லது 30 நாள் கொண்டாடப்படும் இக்கூத்தின் கடைசி நாளன்று நடைபெறும் நிகழ்வினையும் விவரிக்கிறார் பிச்சையா.

பல்வேறு பாடல்களைப் பாடியும், பல்வேறு இசைக் கருவிகளை இசைத்தும் நம்மை வியக்க வைக்கும் காமன் கூத்து வாத்தியார் பிச்சையாவிற்கு முழுதாக எழுதப் படிக்கத் தெரியாது.

இந்த அரிய கலையை அவர் கற்றுக் கொண்டதையும் இந்த சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியில் பிச்சையா விளக்குகிறார்.