ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

க்ரைமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்தது - காணொளி

18 மார்ச் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:27 ஜிஎம்டி

க்ரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பிரேரணை ஒன்றுக்கு ரஷ்ய அதிபர் பூட்டின் அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

க்ரைமியாவில் கடந்த ஞாயிறன்று நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 97 வீதத்தும் அதிகமானோர் யுக்ரெய்னில் இருந்து பிரிந்து, ரஷ்யாவுடன் இணைவது என்று வாக்களித்ததாக அதிகாரிகள் அறிவித்த பின்னர் வேக வேகமாக நடக்கும் பல நிகழ்வுகளில் இது இப்போது நடந்திருக்கிறது.

பனிப்போர் காலகட்டத்துக்குப் பின்னர் பெரிய அளவில் தமக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்யர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.

கிரம்லினில் செண்ட் ஜோர்ஜ் மண்டபத்தில், ரஷ்ய மூத்தவர் அவையில் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பூட்டின் அவர்கள், க்ரைமியா எமக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளார்.

''க்ரைமியா எமது பொதுச் சொத்து. இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கும் அது மிகவும் முக்கியமான விசயமாகும். கேந்திர முக்கியத்துவம் மிக்க அந்தப் பகுதி, பலமான ஸ்திரமான இறையுடன் இருக்க வேண்டும். அது ரஷ்யாவுக்கு சொந்தமாக இருக்கும் போது மாத்திரமே அது சாத்தியமாகும்.'' என்று பூட்டின் கூறியுள்ளார்.

1954 ஆம் ஆண்டிலும், பனிப் போர் காலத்தின் இறுதியிலும், க்ரைமியாவை யுக்ரெய்னிய எல்லைக்குள் இணைத்தது மாபெரும் தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், யுக்ரெய்னை பிரிப்பதற்கு ரஷ்யா விரும்பவில்லை என்றும், க்ரைமியாவைத் தொடர்ந்து யுக்ரெய்னின் ஏனைய பிராந்தியங்களும் அதில் இருந்து பிரியும் என்று கூறப்படுவதை எவரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

மேற்கு நாடுகளை கடுமையாக அவர் தனது உரைவில் விமர்சித்தார்.

''நாம் ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை எடுத்து, அதனை பலப்படுத்த விரும்புவதால், மேற்கு நாடுகள் எம்மை ஒரு மூலையில் தள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. யுக்ரெய்ன் விடயத்தில் மேற்கு நாடுகள் தமது எல்லையை தாண்டிவிட்டன. அவை திமிராக, இரக்கமற்ற வகையில் நடக்கின்றன.'' என்றார் ரஷ்ய அதிபர் பூட்டின்.

ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் தம்மீது புதிய தடைகளை விதித்த போதிலும், க்ரைமியாவை தம்மோடு இணைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த பூட்டின் விரும்புவதுபோல் தென்படுகின்றது. 24 மணி நேரத்துக்குள் ரஷ்யா க்ரைமியாவை தன்னோடு இணைத்துள்ளது.

இதற்கிடையே தாம் சமரசத்துக்கு தயாராக இருப்பதாக கூறும் யுக்ரெய்னிய தற்காலிக அதிபர், ஆனால் க்ரைமியாவை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

இராணுவத்தை பாதி அணிதிரட்டப்பட்ட நிலையில் யுக்ரெய்ன் வைத்திருக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் சூடு பிடிக்கலாம்.

இவை குறித்து காணொளி. இதில் ஒலி வர்ணனை கிடையாது.