நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.5 எம்பி)

இராணுவத்தினர் ஓய்வூதிய சீர்திருத்தம்: "நியாயமான கோரிக்கை"

17 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:47 ஜிஎம்டி

கர்ணல் ஹரிஹரன்
கர்ணல் ஹரிஹரன்

இந்தியாவில் முன்னாள் இராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் என்ற கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒருவர் இராணுவத்திலிருந்து எவ்வளவு காலம் முன்பாக ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் பணிசெய்த காலம் மற்றும் அவர் ஓய்வுபெறுகின்ற நேரத்தில் வகித்த பதவியைப் ஆகியவற்றை பொறுத்து புதிதாக ஒய்வுபெற்றவர்களுக்கு இணையான ஓய்வூதியம் முற்காலத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தற்போதைய இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் ரூ.500 கோடியை மத்திய நிதியமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பற்றியும் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் கோரிக்கையின் பின்னணி பற்றியும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல் ஹரிஹரன் தமிழோசையில் கருத்து தெரிவித்தார்.

சிவில் நிர்வாக ஊழியர்களை விட இராணுவத்தில் பணியாற்றுவோருக்கு பணிக்காலம் குறைவு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே இராணுவத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான ஓய்வூதியம் வழங்குவது அவசியம் என அவர் வாதிட்டார்.

65 சதவீதமாக இருந்துவந்த இராணுவத்தினருக்கான ஓய்வூதியம் 1960களில் 50 சதவீதமாக குறைக்கப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.

கூடுதலான ஓய்வூதியம் கேட்கும் இராணுவத்தினரின் கோரிக்கையை இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஆமோதித்திருந்தும், பல ஆண்டுகளாக அக்கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல் வரவிருக்கும் சூழலில் பெரும் எண்ணிக்கையில் உள்ள முன்னாள் இராணுவத்தினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் அரசாங்கம் தற்போதைய அறிவிப்பைச் செய்துள்ளது என அவர் கருத்து தெரிவித்தார்.