நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.3 எம்பி)

சிறுபான்மை மதத் தலங்களை பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

17 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:01 ஜிஎம்டி

காமன்வெல்த் அமைப்பின் விழுமியங்களை பாதுகாப்பதாக மகிந்த ராஜபக்ஷ காமன்வெல்த் மாநாட்டில் உறுதியளித்திருந்தார்

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களின் மீது நடந்துவரும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அண்மைக் காலங்களில் மாத்தறை, ஹிக்கடுவையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடந்த மதவாத தாக்குதல்களை அடுத்தே, இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம்.என்.எம் அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடந்தன. அரசாங்கம் ஒருசில சம்பவங்கள் பற்றி நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், பொதுவாக பல சம்பவங்கள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று அமீன் குறிப்பிட்டார்.

ஹிக்கடுவையில் கிறிஸ்தவ தேவாலயம் மீது பெளத்த கடும்போக்குவாதிகள் கற்களைக் கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைத் தலைவர்கள், குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றே சமூகத்தில் கருத்துக்கள் நிலவி வருவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்களும் இந்துக் கோவில்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் கடும்போக்கு பௌத்த மதவாத குழுக்களினால் தாக்கப்பட்டுவருவதாக சமூகத் தலைவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.