நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.3 எம்பி)

இசைப்பிரியா பற்றிய சேனல் 4 செய்தி ஒரு நாடகம் என்கிறது இராணுவம்

1 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:37 ஜிஎம்டி

'சரணடைந்த 12 ஆயிரம் பேரில் இசைப்பிரியா இல்லை' - இலங்கை இராணுவம்

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம்பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சேனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது.

சேனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.

'இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கர்ணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறுயாருமோ உயிரோடு பிடிபடவில்லை. நாங்கள் உயிரோடு பிடித்த 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் இசைப்பிரியா அவர்களுடன் இருக்கவில்லை' என்றார் இலங்கை இராணுவப் பேச்சாளர்.

ஆனால், இசைப்பிரியா இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுகின்ற காட்சியையும் பின்னர் அவர் கொல்லப்பட்டிருக்கின்ற காட்சியையும் காட்டுவதாக சனல் 4 வீடியோ கூறுகிறதே என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது, 'அந்த வீடியோ உண்மையானதா என்று நிபுணர்கள் தான் ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் சொல்லுகின்ற வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார்களா அல்லது யாரையாவது நடிக்க வைத்திருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை. இது நடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோவை தொழிநுட்ப ரீதியில் ஆராய்ந்துபார்க்க வேண்டும். இந்த வீடியோ ஒரு நாடகம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்' என்றார் ருவன் வணிகசூரிய.

'அடுத்த மார்ச்சிலும் படங்கள் வெளியாகலாம்': இலங்கை இராணுவம்

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான காணொளிகளை சேனல் 4 கடந்த நான்கு ஆண்டுகளாக வெளியிட்டுள்ளது

இதற்கு முன்னர் இவ்வாறான வீடியோ காட்சிகளை சேனல் 4 வெளியிட்டிருந்தபோது, அவை உண்மையானவை தான் என்று சுயாதீனமான நிபுணர்களை மேற்கோள்காட்டி சேனல் 4 கூறியிருந்தது தானே என்று கேட்டபோது, அவை பொய்யானவை என்றும் வேறு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் வாதிட்டார்.

சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உண்மையில் இந்தப் பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ளும் தேவை இருந்தால், இலங்கைக்கு வந்து அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவர முடியும் என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். 'சேனல் 4 இந்த வீடியோவை காமன்வெல்த் மாநாட்டை இலக்கு வைத்துதான் வெளியிட்டிருக்கிறது. நீங்கள் பொறுமையோடு இருந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் இன்னும் ஒரு வீடியோவோ நிழற்படமோ வெளியாகலாம். அது தான் சேனல் 4வின் பழக்கம் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறிய இலங்கை இராணுவப் பேச்சாளரிடம், பிரிட்டனிலிருந்து இயங்கும் சேனல் 4 நிறுவனம் எதற்காக இலங்கை அரசாங்கம் மீதோ இராணுவம் மீதோ பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என்று தமிழோசை கேள்வி எழுப்பியது.

அதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர்,'இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச்செல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தார்கள். இன்று அவர்கள் அந்தப் பணத்தை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக செலவிடுகிறார்கள். தமிழ் பிரிவினைவாதிகளின் பணத்தின் பிடியில் சேனல் 4வும் சிக்கியிருக்கிறது' என்றார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் இதற்கு முன்னர் சுமத்தியிருந்த இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.