நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (7.1 எம்பி)

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 08

21 அக்டோபர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:53 ஜிஎம்டி

புத்தரின் சிலைக்கு இந்துக் கோயிலில் வழிபாடு

பர்மாவில் தமிழ் இந்துக்களுக்கும் அங்கே பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது.

இங்கே பௌத்தமும் - இந்து மதமும் பல தளங்களில் உறவாடுகின்றன.

பர்மாவில் உள்ள அனைத்து இந்துக் கோயில்களிலும் புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. சில கோயில்களின் கோபுரங்களில் கூட புத்தர் காட்சியளிக்கிறார். வைணவத்தில் கூறப்படும் தசாவதாரத்தில் ஓர் அவதாரமாக பல கோயில்களில் புத்தர் போற்றப்படுகிறார்.

வேறு சில கோயில்களில் புத்த ஜாதக கதைகள் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. புத்தரின் சிலைகளையோ படங்களையோ வைக்குமாறு எவ்வித நிர்ப்பந்தமும் தமக்கு கொடுக்கப்பட்டது கிடையாது என்கிறார் அகில மயன்மார் குருக்கள் சங்கத் தலைவராக இருக்கும் ரங்கூன் காளியம்மன் கோயில் குருக்கள் பரமசிவ சிவாச்சாரியார்.

'தமிழ்க் கோயில்களுக்கு பர்மியர்கள் வருகின்றனர். தேங்காய் உடைக்கின்றனர். அர்ச்சனை செய்கின்றனர். தீ மிதிப்பது போன்ற விழாக்களில் பர்மியர்கள் அதிக அளவு பங்கேற்கிறார்கள்' என்று கூறுகிறார் பலகோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ள ஆரிய சண்முக சிவாச்சாரியார்.

புத்தரை இந்து சமயம் ஏற்பதாகவும் பெரும்பான்மையினரை அனுசரித்துப் போவதால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றும் கூறுகிறார் ரங்கூனில் இருக்கும் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் நிர்வாகியான தேவராஜ்.

பௌத்த துறவிகள் 5 லட்சம் பேர்

ரங்கூனில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக ஷவேடகான் பகோடா இருக்கிறது. புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரை சந்தித்த இரண்டு பர்மிய வர்த்தகர்கள், புத்தரின் 8 தலைமுடியைப் பெற்றுக் கொண்டுவந்ததாகவும் புத்தரின் காலத்திலேயே அவரின் சமயமும் இங்கே வந்துவிட்டதாகவும் உள்ளூரில் நம்பிக்கை இருக்கிறது.

புத்தரின் தலை முடியும் அவர் தொடர்புடைய மேலும் மூன்று பொருட்களும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்த பகோடா கட்டப்பட்டுள்ளது என்பது மக்களின் நம்பிக்கை. குன்றின் மேல் உள்ள இந்த பகோடாவின் கோபுரம் 99 மீட்டர் உயரமுடையது. பொன்னால் வேயப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். பெளத்தர்கள் இந்துக் கோயிலுக்கு வருவது போல - இங்கே பல இந்துக்கள் வந்து செல்கின்றனர்.

பகோடாவில் வைக்கப்பட்டுள்ள சிறிய புத்தர் சிலைக்கு யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்து விட்டுச் செல்லலாம்.

ரங்கூனில் உள்ள ஷவேடகான் பகோடா

உலகிலுள்ள மிகவும் பழமையான பகோடா இதுதான் என்று பர்மியர்கள் கூறுகிறார்கள். ஆய்வாளர்களோ இந்த பகோடா புத்தர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு - அதாவது 6 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மோன் என்ற இனப் பிரிவினரால் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இந்த நாட்டில் சிறிய ஊர்களில் கூட மடாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கலைத் திறனை வெளிக்காட்டும் வகையில் மிகவும் அழகாக வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளன. 90 சதவீதம் பேர் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுவதால் துறவிகளுக்கு சமூக மரியாதை இருக்கிறது. விடுதலைப் போரிலும் சமீபத்தில் அரசியல் மாற்றங்கள் கோரியும் பௌத்த துறவிகள் போராடியுள்ளனர்.

காலையில் சாலையில் சென்றால், சட்டியைத் தூக்கிக் கொண்டு வரும் பௌத்த பிக்குகள் ஏராளமாக கண்ணில் படுகின்றனர். நாட்டில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட புத்த பிக்குகளின் எண்ணிக்கை அதிகம்.

அதாவது அங்கு சுமார் 5 லட்சம் பேர் பிக்குகளாக இருக்கின்றனர். சில தமிழர்களும் புத்த மதத்தை தழுவியுள்ளனர். துறவரமும் பூண்டுள்ளனர். புத்த மதத்தை வளர்த்தமைக்காக அரசின் விருது பெற்றுள்ளவர் க. தி. முருகேசன். கோயில்களில் பெருமளவில் இடம்பெற்ற மிருக பலிகளால் தான் மதம் மாறியதாக அவர் தெரிவித்தார்.