நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (8.4 எம்பி)

'செல்வம் அடைக்கலநாதன் மீது கட்சி நடவடிக்கை'

12 அக்டோபர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:56 ஜிஎம்டி

டெலோவின் பரிந்துரையை மீறி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்தளித்தாக சிவாஜிலிங்கம் தரப்பினர் புறக்கணித்தாலும், டெலோ தலைவர் அடைக்கலநாதன் எம்.பி. பதவிப் பிரமாணநிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்

இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத் தலைவர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை கணக்கில் எடுக்காது தமிழரசுக் கட்சி தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக டெலோ அமைப்பிலிருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள கே. சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே, முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் முன்னால் நடந்த பதவிப் பிரமாண நிகழ்வை தாம் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும் புறக்கணித்ததாகவும் அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுவதாக டெலோ, ஈபிஆர்எல்எப் குற்றச்சாட்டு

டெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண அமைச்சர்கள் தெரிவினையும் அங்கீகரித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் கட்சி ஏற்கனவே எடுத்திருந்த முடிவுக்கு மாறாக நடந்துகொண்டதையிட்டு டெலோ கட்சியின் பொதுக்குழு உடனடியாகக் கூடி முடிவெடுக்கும் என்று சிவாஜிலிங்கம் தமிழோசையி்டம் கூறினார்.

இதேவேளை, டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தமிழோசை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்தப் பிரச்சனை தொடர்பில் தான் கருத்தெதனையும் கூற விரும்பவில்லை என்று அவர் கூறிவிட்டார்.