BBC navigation

'தமிழர்களுக்கு நீதி கிடைத்தால், இலங்கை பழியிலிருந்து தப்பலாம்'-சம்பந்தன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 செப்டம்பர், 2013 - 15:34 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சர்வதேச சமூகம் இலங்கை மீது குறிவைக்கிறது என்ற மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தை ஏற்கமுடியாது, மாறாக உண்மையான நல்லிணக்கம் ஏற்பட்டால், தமிழர்களுக்கு நீதி கிடைத்தால், இலங்கை மீது ஏற்படக்கூடிய பழியிலிருந்து அது தப்பலாம் என்கிறார் ததேகூ தலைவர் சம்பந்தன்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

'நல்லிணக்கம் ஏற்பட்டால், அரசு பழியிலிருந்து தப்பலாம்'-சம்பந்தன்

இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன, தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன , ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப் பொதுச்சபை உரையில் குறிப்பிட்டதை ஏற்கமுடியாது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், இலங்கையில் போர் முடிந்து நான்காண்டுகளாகியும், தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

அரசுக்கு, இந்தப் போரின் போது பல்வேறு நாடுகள் உதவின, போரின் போதும், போருக்குப் பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ இந்த நாடுகளுக்கும் ஐநா மன்றத்துக்கும் பல்வேறு உறுதிமொழிகளைத் தந்தார். இவை நிறைவேற்றப்படவில்லை என்றார் சம்பந்தன்.

மேலும், மனித உரிமைகள் குறித்த பிரச்சினையில் இன்னும் ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, இதையும் சர்வதேச சமூகம் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை என்று மஹிந்த கூறியதற்கு பதிலளித்த சம்பந்தன், அபிவிருத்தி என்பது ஒரு மாயை என்றார்.

வடக்கில் மக்களுக்குத் தேவை சுய கௌரவத்துடன் கூடிய அரசியல் தீர்வும், அவர்களது இழப்புகளுக்கு நீதியும்தான். இதை விடுத்து சாலைகளை அமைப்பது, மின்சாரக் கம்பங்களை நடுவது போன்றவற்றால் மட்டும் மக்களை திருப்திப் படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் கூட பெரும் சர்வதேச அழுத்தத்தின் பின்னணியில்தான் நடந்து முடிந்தன என்று கூறிய சம்பந்தன், இந்தத் தேர்தலில் பல குறைகளை பட்டியலிடமுடியும் என்றும், ஆனாலும், குறைகளை மீறி, மக்கள் தங்களது கருத்தை தெளிவாக அரசுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் கூறினார்.

இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் கோரினார்.

அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினாலே கூட , விமர்சனங்களிலிருந்து அரசு விடுபடலாம் என்று கூறிய சம்பந்தன் ஆனால் இது குறித்து அரசுக்கே ஒரு திடமான நிலைப்பாடு இல்லை , எனவே தான் இந்தப் பரிந்துரைகளைக் கூட அமல்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.