BBC tamil

முகப்பு > இலங்கை

பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு குறித்து ரணில் குற்றச்சாட்டு

Facebook Twitter Google+
18 நவம்பர், 2012 - 14:51 ஜிஎம்டி

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டுகிறார்.

வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை திருத்திய பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

''ஒரு அமைச்சிக்காக உள்ள நிதியை இன்னொரு அமைச்சிக்காக ஒதுக்குவது என்பது நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, நீதியரசர் ஷிராணி திலகவர்த்தன இந்த வழக்கு மீதான விசாரணையின்போது உதாரணமொன்றை சுட்டிக்காட்டினார். அதாவது கல்வி அமைச்சிக்கான நிதியை ஏனைய அமைச்சுகளுக்கு மாற்றிவிட்டால் நாட்டின் இலவசக்கல்வி பாதிக்கப்படும். எனவே நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு திருத்தம் தேவை என்று கூறப்பட்டபோதிலும் அரசு அதனைச் செய்யாமல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை நிறைவேற்றிவிட்டது. இப்படிச் செய்வது அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது'' என்று ரணில் கூறியுள்ளார்.

'மக்கள் ஆணைக்கு விரோதமானது'

கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்த வரவுசெலவுத்திட்டம் மக்கள் ஆணைக்கு விரோதமானது என்றும் கூறினார்.

''உச்சநீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, இந்த வரவுசெலவுதிட்டத்தை நிறைவேற்றமுடியாது, அது எமது அரசியலமைப்புக்கு முரணானது, அதாவது நாட்டு மக்களின் ஆணைக்கு முரணானது. அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரமுடியாது. அதற்கான வாக்கெடுப்பில் நாங்கள் ஈடுபடமுடியாது'' என்ற ரணில், அரசாங்கம் சட்டத்துக்கு முரணான வகையில் வரவு செலவுத் திட்டத்துக்கு நிதி சேகரிக்க முனைவது ஒரு கப்பம் பெறும் நடவடிக்கை என்று கூறினார்.

திவிநெகும மற்றும் வரவு செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஆகிய சட்ட மசோதாக்களில் அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் இருப்பதால், அவற்றுக்கு திருத்தங்கள் கொண்டுவந்த பின்னரே அவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்ற முடியும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

திவிநெகும சட்டமூலத்தில் உள்ள அரசியலமைப்புக்கு முரணான விடயங்களில் திருத்தங்களை கொண்டுவந்து நிறைவேற்றுவதாக பொருளாதாரதுறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஆனால் வரவுசெலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை திருத்திவிட்டு அதனை நிறைவேற்றுவதாக ஜனாதிபதியோ, தொடர்புடைய அமைச்சர்களோ நாடாளுமன்றத்தில் கூறாமல் 2-ம் வாசிப்பை நிறைவேற்றியது உச்சநீதிமன்றத்தையும் அரசியலமைப்பையும் மீறும் செயல் என்றும் கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரணில் கூறினார்.

ஊடகங்கள் கேள்வி எழுப்ப அனுமதிக்கவில்லை

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எந்த ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க அனுமதிக்கவில்லை.

ரணிலின் கருத்துக்கள் தொடர்பில் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பமுனைந்தவேளை, அதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மறுப்புத் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஊடகவியலாளர் சந்திப்புக்காக வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஊடகவியலாளர்களுக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter