BBC tamil

முகப்பு > இலங்கை

'அரசின் வேலைத்திட்டங்கள் சுற்றுச்சூழல் வளங்களை அழிக்கின்றன'

20 பிப்ரவரி, 2012 - 17:50 ஜிஎம்டி
'அரசின் வேலைத்திட்டங்கள் சுற்றுச்சூழல் வளங்களை அழிக்கின்றன'

இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மிக்க பல பகுதிகளை அரச நிறுவனங்கள் அழித்துவருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிவேக பாதைகள், அனல் மின்நிலையங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களின்போது பறவைகள், தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் என உயிரியல் பல்வகைத் தன்மைக்கு முக்கியமான பல பிரதேசங்கள் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலாத் தேவைகளுக்காகவும் கட்டட நிர்மாணங்களுக்காகவும் இவ்வாறான பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அழிக்கப்படுவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அத்திடிய பறவைகள் சரணாலயம்

இதனிடையே, கொழும்பின் புறநகர் பகுதியான பெல்லன்வில-அத்திடிய என்ற இடத்தில் உயிரியல் பல்வகைத் தன்மைக்காக பாதுகாக்கப்பட்ட பெரும் நிலப்பரப்பில் பாதுகாப்பு அமைச்சும் காணி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து வடிகால்களை அகலப்படுத்தும் வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன்மூலம் பிரதேசத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஈசீடீ என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்பு கூறுகிறது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலப்பகுதியில் அரசின் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் உரிய பராமரிப்பு இன்மையால் உயிரியல் பல்வகைத்தன்மைகள் இன்று அழிவடைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ். விஸ்வலிங்கம் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பகுதியில் வடிகால்களை அகலப்படுத்துவது எஞ்சியிருக்கும் உயிரினங்களையும் அழிக்கும் செயல் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இதுதொடர்பில் கேட்டபோது, இந்தப் பிரச்சனை தனது கவனத்துக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை என்று இலங்கையில் வனஉயிர் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தமிழோசையிடம் கூறினார்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Orkut Twitter