BBC tamil

முகப்பு > இந்தியா

2-வது நாளாக இந்தியாவில் கடும் மின்தடை

Facebook Twitter Google+
31 ஜூலை, 2012 - 15:16 ஜிஎம்டி

வட இந்தியாவில், இரண்டாவது நாளாக ஏற்பட்ட மின்விநியோக செயலிழப்பு காரணமாக, 20 மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் செவ்வாய்க்கிழமை கடும் பாதிப்பு ஏற்பட்டது.

ரயில் போக்குவரத்து உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டதால், சுமார் 60 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் வடமாநில மின்தொகுப்பு திடீரென செயலிழந்தது. அதாவது, நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட மின் தொகுப்பு பாதிப்பு சரி செய்யப்பட்டு சில மணி நேரங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கிழக்கு மாநில மின்தொகுப்பும், வடகிழக்கு மாநில மின்தொகுப்பும் செயலிழந்தன. இந்த மூன்று மின் தொகுப்புக்களும் சுமார் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை விநியோகிக்கின்றன.

வட மாநில மின்தொகுப்பில் மட்டும், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாசலப் பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களும் டெல்லி, சண்டீகர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் உள்ளன. மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஒரிஸா உள்ளிட்ட மாநிலங்கள் கிழக்கு மின்தொகுப்பில் உள்ளன. வடகிழக்கு மின்தொகுப்பில் 7 மாநிலங்கள் உள்ளன.

இதுதான், உலகிலேயே மிகப்பெரிய மின்தொகுப்பு செயலிழப்பு என்று கூறப்படும் நிலையில், இது நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட மின்தட்டுப்பாட்டை விட, பலமடங்கு பெரியது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மின் விநியோகம் செயலிழந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உடனடியாக மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையான இந்திய ரயில்வேயும் நூற்றுக்கணக்கான நீண்ட தூர ரயில்களை பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்திவிட்டது. 6 ரயில்வே மண்டலங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், மூன்று லட்சம் பயணிகளின் பயணம் தடைபட்டது.

கொல்கத்தாவில், மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அரசால் இயக்கப்படும் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மின்தடை காரணமாக சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார். மேலும், மின்தடை காரணமாக, கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழை பிற்பகலில் விடுமுறை அளிக்கப்படுவாதகவும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

இதனிடையே, மின்தொகுப்புக்கள் செயலிழந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் சுஷிஸ்குமார் ஷிண்டே, சில மாநிலங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அளவைவிட, அதிக அளவில் மின்சாரத்தை எடுத்ததே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.

அந்த மாநிலங்கள் எவை என்பதைப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்த தேசிய மின்தொகுப்பு ஆணைய மேலாண் இயக்குநர் ஆர்.என். நாயக், எந்த இணைப்பு வழியாக கூடுதல் மின்சாரம் எடுக்கப்பட்டது, எப்போது மின் தொகுப்பு விநியோகம் தடைபட்டது என்று எல்லா அம்சங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்– என்றார்.

இரவு ஏழு மணியளவில் வடமாநில மின்தொகுப்பில் 45 சதமும், கிழக்கில் 35 சதமும், வடகிழக்கில் 100 சதமும் மின்விநியோகம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், டெல்லிக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதாகவும் அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். மெட்ரோ ரயில் சேவையும் பெருமளவு சீரடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒதுக்கப்பட்ட அளவை விட கூடுதல் மின்சாரத்தை தொகுப்பில் இருந்து பயன்படுத்தியது ஏன் என்பது குறித்து ஆகஸ்ட் 14-ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்கவேண்டும் என்று அந்த நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளது.

தொடர்நது இரண்டு தினங்களாக ஏற்பட்ட மாபெரும் மின்தடை, உலக அரங்கில் இந்தியாவுக்கான தொழில் முதலீட்டு வாய்ப்ப்புக்களுக்கு மேலும் பாதகத்தை ஏற்படுத்தும் என தொழில்துறையினர் கருதுகிறார்கள்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter