BBC tamil

முகப்பு > இந்தியா

'மனைவி சீதையைப் போல் இருக்க வேண்டும்' : நீதிமன்றம்

Facebook Twitter Google+
9 மே, 2012 - 17:51 ஜிஎம்டி
'மனைவி சீதையைப் போல் இருக்க வேண்டும்' : நீதிமன்றம்

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, அத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், புடவை மற்றும் சுடிதார் போன்ற பாரம்பரிய இந்திய உடைகளையே அணிந்து வரவேண்டும், ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற “ கண்ணியக்குறைவான” ஆடைகளை அணியக்கூடாது என்று சர்ச்சைக்குரிய உத்தரவொன்றைப் பிறப்பித்திருக்கிறது.

இந்த சுற்ற்றிக்கை பெண்ணியவாதிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹரான்பூர் மாவட்ட உயர் போலிஸ் அதிகாரி ஒருவர் காவல் நிலையம் ஒன்றைச் சென்று பார்வையிட்டபோது, தனது பதின்பருவ மகளை சிலர் கடத்திச்சென்று விட்டார்கள் என்று புகார் கொடுக்கவந்த ஒரு தந்தையைப் பார்த்து, 'மகளை காணவில்லை என்றால், மகளைக் கண்டுபிடித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்துகொள்ளவேண்டும்' என்று கூறியது வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

கௌரவக் கொலைகளை நியாயப்படுத்துவதாக அவரது இந்தக் கருத்து அமைந்திருப்பதாக மனித உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

இன்னொரு சம்பவத்தில், விவாகரத்து வழக்கொன்றை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர், விவாகரத்து கோரிய மனைவிக்கு, ராமாயணக் கதாநாயகி சீதை வாழ்ந்த்தைப் போல , கணவருக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியதாகச் செய்திகள் வந்தன.

இந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களும் , இந்திய அதிகார மட்டங்களில்,பெண்களுக்கு எதிரான மனோநிலை இருப்பதைக் காட்டுகிறதா என்று கேள்விகளை எழுப்புகின்றன.

இந்த பிரச்சினை குறித்து பதிலளித்த பெண்ணியவாதியும் வழக்கறிஞருமான அருள்மொழி உடை விஷயத்தில் ஹரியானா அரசுத் துறையின் நடவடிக்கை , ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியதே என்றாலும் , மாற்றுக் கலாச்சார உடைகளை கண்ணியமற்ற உடை என்று கூறுவது சரியல்ல என்றார்.

அதுபோல , சீதை போல் நடந்து கொள்ளவேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதற்கும் , முன்னுதாரணங்கள் உள்ளன. இதை வெளிப்படையாக கண்டிக்க முடியாத சூழ்நிலை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு இருக்கிறது என்றார்.

ஆனால், போலிஸ் அதிகாரியின் கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை, இது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டிய அரசும் , அரசுத் துறைகளும் எந்த அளவுக்குத் துருப்பிடித்துப் போயிருக்கின்றன என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது என்று அருள்மொழி கூறினார்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter