BBC tamil

முகப்பு > இந்தியா

குஜராத் முதல்வருக்கு எதிராக ஆதாரமில்லை

Facebook Twitter Google+
10 ஏப்ரல், 2012 - 13:55 ஜிஎம்டி
முதல்வர் நரேந்திர மோடி

குஜராத் கலவரத்தில் முக்கிய சம்வமான குல்பர்கா குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு பலனாய்வுக் குழு தெரிவித்துள்ளதாக குஜராத் கீழ் நீதிமன்றம் ஒன்று செவ்வாய்கிழமை கூறியுள்ளது.

அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேரந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி, குல்பர்கா குடியிருப்புப் பகுதி தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்தோர் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட 58 பேர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லை என்று, முன்னாள் சிபிஐ இயக்குனர் ஆர் கே ராகவன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாக பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். பட் தெரிவித்தார்.

அதே நேரம் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின் நகல், ஜகியா ஜாஃப்ரிக்கு 30 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறினார் கொல்லப்பட்ட இஷான் ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி.

"இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது., நீதிமன்றம் – அமீகஸ் குரி எனப்படும் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரின் அறிக்கையை கணக்கில் கொள்ளவில்லை". என்றார் தன்வீர் ஜாப்ரி.

கோத்ரா ரயில் எரிப்பு

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்து யாத்திரிகர்கள் பயணித்த ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மிக மோசமான வன்முறை குஜராத்தில் வெடித்தது. அந்தக் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையானோர் முஸ்லீம்கள்.

கலவரத்தை தடுக்க மாநில முதல்வர் நரேந்திர மோடியும் அவரது கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் மையமாக இருக்கும் குல்பர்கா குடியிருப்புப் பகுதியை சுற்றிவளைத்து வன்முறையாளர்கள் தாக்கியபோது, அதில் சிக்கிய தன்னையும் தன்னோடு இருப்போரையும் காப்பாறுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரி தொலைபேசி மூலமாக நரேந்திர மோடியிடம் முறையிட்டும் அவர் ஏதும் செய்யவில்லை என்பதே மோடியின் மீதான குற்றச்சாட்டாக இருந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி, நரேந்திர மோடி நியாயமற்ற முறையில் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

அதே நேரம் குஜராத் படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையும் – நீதிமன்றத்தின் நண்பனாக செயல்படும் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த அறிக்கையும் முற்றும் வேறான தகவல்களை அளிப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் தலைமையிலான குழு அளித்த அறிக்கை, செயற்பாட்டாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இன்றைய தீர்ப்பு குறித்து தான் நேரடியாக எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆர் கே ராகவன்.

திருமதி ஜாப்ரியின் வாதங்களைக் கேட்ட பிறகு நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter