BBC tamil

முகப்பு > உலகம்

மண் சுத்திகரிப்பு தொழிற்சாலை வருவதை எதிர்த்து மலேஷியாவில் ஆர்ப்பாட்டம்

26 பிப்ரவரி, 2012 - 13:16 ஜிஎம்டி
ஆர்ப்பாட்டம்

மண்ணிலிருந்து அரிய உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் ஒன்று மலேஷியாவில் கட்டப்படவிருப்பதை எதிர்த்து ஞாயிறன்று இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடி ஆர்ப்பாட்டங்களைச் செய்துள்ளனர்.

கைத்தொலைபேசிகள், மெல்லிய திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கப் பயன்படும் அரிய உலோகங்களை இந்த சுத்திகரிப்பு நிலையம் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கும்.

இந்த சுத்திகரிப்பு நிலையம் அமையக்கூடிய பகுதியில் அணுக் கதிர்வீச்சு அபாயம் எழும் என்று அஞ்சி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த தொழிற்சாலை வந்தால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும், இத்தொழிலில் சீனாவே ஆதிக்கம் செலுத்தும் நிலையை உடைக்கலாம் என்றெல்லாம் நினைத்து மலேஷிய அதிகாரிகள் இத்தொழிற்சாலை கட்டப்படுவதற்கு அண்மையில் உரிமம் வழங்கியிருந்தனர்.

ஆனால் இந்த தொழிற்சாலை அமையவிருக்கின்ற இடத்தைச் சுற்றி வாழ்பவர்கள் இத்தொழிற்சாலை வரக்கூடாது என்று விரும்புகின்றனர்.

அரை மணி நேரத்தில் வாகனத்தில் சென்றுவிடக்கூடிய அளவுக்கு இத்தொழிற்சாலை அருகிலேயே அமையவுள்ளது என்பதால் குவண்டன் நகரத்து மக்கள் மிகவும் அதிகமான கவலை கொண்டுள்ளார்கள் காரணம் ஏனென்றால்

அரிய உலோகங்களுக்காக மண் சுத்திகரிப்பு செய்வதென்பது சில வேளைகளில் நச்சுப் பொருட்களை வெளியிடக்கூடிய ஒரு விஷயமாக அமையும் என்பதால் தங்கள் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்படலாம் என்று இவர்கள் அஞ்சுகின்றனர்.

மண் சுத்திகரிப்பு என்பது இதுநாள்வரை பெருமளவில் சீனா ஈடுபடுகின்ற ஒரு தொழிலாகவே இருந்து வந்துள்ளது.

மண்ணில் இருந்து அரிய உலோகங்களை ஆபத்தில்லாமல் பாதுகாப்புடன் பிரித்தெடுப்பதற்குரிய புதிய முறை ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக மலேஷியாவில் தொழிற்சாலை அமைக்கவுள்ள ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான லினாஸ் கூறுகிறது.

இந்த புதிய முறையில் உலோகம் பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சும் கழிவுப் பொருளில் குறைந்த அளவிலான அணுக் கதிர்வீச்சு இருக்கும் என்பதுதான் இதிலுள்ள ஒரே பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இந்த குறைந்த கதிர்வீச்சினால் மக்களுக்கு எவ்விதமான சுகாதாரப் பிரச்சினையும் தோன்றாது என்று தற்போது மலேஷிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் அந்த வாதத்தை ஏற்க தொழிற்சாலையை சுற்றவரவுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் தயாராக இல்லை.

இருந்தாலும் தொழிற்சாலை அமைப்பது என்ற தமது தீர்மானத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என மலேஷிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.

லினாஸ் நிறுவனத்துக்கு அரசாங்கம் ஏற்கனவே உரிமம் வழங்கிவிட்டது. இந்த வருடக் கடைசியில் அத்தொழிற்சாலை செயல்படத் துவங்கலாம்.

மலேஷியாவில் இதேபோல ஆர்ப்பாட்டங்கள் நடந்ததையடுத்து முன்பும் ஒரு அரிய உலோகங்களுக்கான மண் சுத்திகரிப்பு தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.

இந்தத் திட்டமும் ரத்து ஆகும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என ஆர்வலர்கள் சூளுரைக்கின்றனர்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter