இரானில் சர்வதேச அணு சக்தி நிறுவனக் குழு

இரானின் அணுத் திட்டத்தின் இராணுவ பரிமாணம் குறித்த கவலைகளை களையும் நோக்கத்தில் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் குழு ஒன்று பேச்சு நடத்துவதற்காக தெஹ்ரான் சென்றிருக்கிறது.
தமக்கு எதிராக அதிகரித்து வருகின்ற பொருளாதாரத் தடையின் பழுவுக்கு எதிரான பதில் நடவடிக்கைகளை இரான் தேடுகின்ற நிலையில் இந்த குழுவின் விஜயம் நடந்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி இந்த விவகாரம் தொடர்பில் இரானில் இருந்து வருகின்ற சமிக்ஞைகள் தவிர்க்க முடியாத வகையில் முரண்பாடானதாகவும், குழப்பகரமானதாகவும் இருக்கிறது.
உண்மையில் என்னதான் நடக்கிறது?????.
தற்போது தெரிகின்ற அனைத்து சமிக்ஞைகளும் மேற்கு நாடுகளின் இரான் மீதான தடைகள் இறுதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளதையே காண்பிக்கின்றன.
நாட்டின் பொருளாதார பிரச்சினையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், இந்தத் தடையின் மூலம் எதனை எட்ட வேண்டும் என்று அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் எதிர்பார்க்கின்றனவோ, அது நடப்பதற்கான சமிக்ஞைகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
அதாவது இரான் தனது யுரேனியச் செறிவாக்கல் நடவடிகைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்ப்பார்க்கின்றன. ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை.
மாறாக தனது யுரேனியச் செறிவாக்கல் நடவடிக்கைகளை 20 வீதத்துக்கு அதிகரிக்க இரான் திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன.
அப்படி அது செய்ய விளையுமானால், அது அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான ஒரு வேக வழியாக அமையும்.
குவம் நகருக்கு அருகே ஃபோர்டோ என்னும் இடத்தில் நிலத்துக்கு கீழே மிகவும் பாதுகாப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஆலையில், சுழற்சி முறையில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான மிகவும் நவீன வகையிலான சென்றிபியூஜுகள் என்னும் கருவியையும், குறிப்பாக அடுக்கடுக்கான சென்றிபியூஜுகள் தொகுதியையும் இரான் அறிமுகம் செய்வதாக செய்திகள் வந்துள்ளன.
இரான் கடுமையாக பேசிவருவதற்கும் மேலாக, பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமான தனது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதுடன், சூயஸ் கால்வாய் ஊடாக மத்திய தரைக்கடலுக்கு ஒரு சிறிய படகுத் தொடரணியையும் பயன்படுத்துகிறது.
ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இரான் ஒரு முரண்பாடுகள் குறைந்த திசையில் செல்வதாகவே கூறப்படுகின்றது.
இரானுக்கு சர்வதேச அணு நிறுவனத்தின் குழு ஒன்று வந்திருக்கின்றது என்பது ஒரு சுவாரசியமான விடயந்தான்.
இதன் மூலம் பாதுகாப்புச் சபையின் நிரந்திர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனியுடன் தமது அணுத்திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க இரான் விரும்புகிறது என்பதை அது காண்பிக்கிறது.
ஆகவே இந்த சமிக்ஞைகளின் காணப்படுகின்ற முரண்பாடுகள், இரானிய ஆளும் உயர் பீடத்தில் காணப்படுகின்ற ஸ்திரமின்மை மற்றும் அதீத குழப்பத்தை பிரதிபலிக்கலாமே ஒழிய அணுத்திட்டம் குறித்த அதன் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாக கொள்ள முடியாது.

இதைப் பகிர்க