இயற்கையை வணங்கும் பிஷ்நொய் பழங்குடி மக்களின் வாழ்க்கை

21 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 11:51 ஜிஎம்டி

மரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்ட ராஜஸ்தானின் பிஷ்நொய் பழங்குடி மக்களின் வாழ்க்கையைக் காட்டும் சில படங்கள்.
பிஷ்நொய் இனத்தார் இந்தியாவின் பழங்குடியினத்தவர்களில் ஒரு பிரிவினர். மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடத்தும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள் இவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை அரிந்தம் முகர்ஜி என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.
மண்ணோடும் தாவரங்களோடும் விலங்குகளோடும் சுமூகமாக வாழ்கின்றவர்கள் பிஷ்நொய்கள். ஜோத்பூர் அருகேயுள்ள சிங்க்காரா என்ற வனப்பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது.
இந்தியாவின் "பூர்வீக" இயற்கை பாதுகாவலர்கள் என்று பிஷ்நொய்களைச் சொல்லலாம். ஜாம்பாஜி என்ற குரு சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரப்பிய நம்பிக்கையை பிஷ்நொய்கள் பின்பற்றுகிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கல்விபூர்வமான விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அக்கொள்கையை தமது வாழ்க்கை முறையில் கடைப்பிடித்து வருபவர்கள் இவர்கள். 1730 ஆம் ஆண்டு மன்னர் ஒருவர் அரண்மனை கட்டுவதற்காக மரங்களை வெட்ட முயன்றபோது அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக உயிர்விட்ட பிஷ்நொய்களின் கதை அங்குள்ள உணவகம் ஒன்றில் படமாக உள்ளது.
பிஷ்நொய் கிராமங்களில், பறவைகள் விலங்குகள் போன்றவை மனிதர்களுக்கு பயப்படாமல் திரியலாம்.
பிஷ்நொய்கள் வீட்டிலேயே சமைத்த சைவ உணவை மட்டுமே உண்கின்றனர். எளிய ஆடைகளையும் மட்டுமே உடுத்துகின்றனர்.
ஆனால் இவ்வின பெண்கள் தங்கத்தை அதிகம் விரும்புகின்றனர். தங்கம் வைத்திருப்பதை முதலீடாகவும், அந்தஸ்தாகவும் இவர்கள் பார்க்கின்றனர்.
பிஷ்நொய்கள் போதைச் செடி ஒன்றிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பானத்தை விரும்பிக் குடிக்கின்றனர். அமல் என்று இந்த பானத்துக்கு பெயர்.
பிஷ்நொய்களில் ஆண்கள் பெண்கள் இருவருமே வயல்களில் வேலைசெய்வார்கள்.
விலங்குகளை வேட்டையாடுபவர்கள், சட்டவிரோதமாக கொல்பவர்கள் போன்றோரை பிஷ்நொய்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். அண்மையில் இவர்கள் பல நீதிமன்ற வழக்குகளையும் தொடுத்திருந்தனர்.